(எம்.எப்.எம்.பஸீர்)

எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி  இலங்கையில் பொதுத் தேர்தல் நடாத்த திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யக் கோரி சட்டத்தரணி ஒருவர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.

அரசியலமைப்பின்  104 ஆவது சரத்துடன் இணைத்து வாசிக்கத்தக்கதாக  126 ஆம் ,17 ஆம் சரத்துக்களின் அடிப்படையில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று தாக்கல் செய்ப்பட்டுள்ளது.

 

தேர்தல்கள் ஆணைக் குழு, தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய,  ஆணைக் குழு உறுப்பினர்களான என்.ஜே. அபேசேகர, ரத்னஜீவன் ஹூல், ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர,  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

கொழும்பு பேஸ் லைன் வீதியைச் சேர்ந்த முன்னாள் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரான சட்டத்தரணி  சரித்த குணரத்ன இந்த  அடிப்படை உரிமை மீறல் மனுவை,  சட்டத்தரணி இப்பத் சஹாப்தீன் ஊடாக தாக்கல் செய்துள்ளார்.

அரசியலமைப்பு ஊடாக மனுதாரருக்கு கிடைக்கும் உரிமைகளான அரசியலமைப்பின் 12(1), 14, 27 ஆம் சரத்துக்கள் ஊடாக குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு இந்த மனு ஊடாக கோரியுள்ள மனுதாரர், கடந்த 20.04.2020 அன்று 2,3,4 ஆம் பிரதிவாதிகளால் ( தேர்தல்கள் ஆணைக் குழு உறுப்பினர்கள்) வெளியிடப்பட்ட ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவது குறித்தான 2172/03 ஆம் இலக்க  வர்த்தமானியை செயலிழந்ததாக அறிவிக்குமாரும்  கோரியுள்ளார்.

 

அத்துடன் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கும் படியும், மனுவை விசாரித்து முடியும் வரை பொது தேர்தல் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க  2 முதல் 5 வரையிலான பிரதிவாதிகளுக்கு ( தேர்தல்கள் ஆணைக் குழு உறுப்பினர்கள், ஜனாதிபதி செயலாளர்) இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாரும் மனுதாரர் கோரியுள்ளார்.