கொழும்பில் உள்ள  பிற மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களை விரைவாக அவர்களது மாவட்டங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொழில் நிமித்தம்  கொழும்புக்குச் சென்ற நிலையில்   கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட  ஊரடங்குச் சட்டம் காரணமாக சொந்த மாவட்டங்களுக்கு  திரும்ப முடியாத நிலையில்  மிகவும் நெருக்கடிக்குள்  உள்ள இளைஞர்களை  விரைவாக  சொந்த மாவட்டத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சாமல் ராஜபக்சவிடம் கோரியுள்ளார்.

கொழும்பில் தொழில் நிமிர்த்தம் சென்று மாவட்டத்திற்கு திரும்ப முடியாது உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இன்றி நெருக்கடிக்குள் இருக்கும் இளைஞர்கள்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாரிடம் தொலைபேசி ஊடாக  தொடர்பு கொண்டு தங்களை விரைவாக தங்களது மாவட்டங்களுக்கு அழைத்து வருமாறு தெரிவித்ததை தொடர்ந்து அவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு சென்றுள்ளார். 

அத்தோடு  கொரோனா தடுப்பு நடவடிக்கை செயலணிக்கு பொறுப்பாகவுள்ள பசில் இராஜபக்சவின் கவனத்திற்கும் இந்த விடயத்தை கொண்டு சென்றுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.

குறித்த இளைஞர்களை விரைவாக அவர்களது மாவட்டங்களுக்கு   அனுப்பி வைக்க உதவுமாறும்,  அதுவரைக்கும் அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறும் கோரியுள்ளார். 

மேலும் இவ்வாறு கொழும்பில் உள்ள இளைஞர்களை  பொலீஸார் ஊடாக பொது அறிவித்தல் மூலம்  ஒருங்கிணைத்து அவர்களை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கோரியுள்ளார்.