மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை பாதித்து.இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை உயிர் பலி வாங்கி, அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து புதிய அறிகுறிகள் கண்டறியப்பட்டிருப்பதாக அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொவிட் - 19 என்ற வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கான முயற்சிகளில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன. இது தொடர்பாக பல நாடுகளும், பல்வேறு வகையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா தொற்றை குணப்படுத்துவதற்கு தற்போது பிளாஸ்மா சிகிச்சை என்ற சிகிச்சை குறித்த ஆய்வுகளும், இதற்கான தடுப்பூசி குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன . இந்நிலையில் இந்த நோய்க்கான அறிகுறி குறித்த புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.

இதுவரை கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு, அந்த வைரஸ் தொற்று தாக்கிய பின்னர், 2 முதல் 14 நாட்களுக்கு பிறகுதான் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கும் என்றும், காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு, வலி, மூக்கடைப்பு, வயிற்றுப்போக்கு, தொண்டை வறட்சி உள்ளிட்டவைகள் தான் வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டிருந்தது. ஆனால் தற்போது மேலும் சில புதிய அறிகுறிகள் கண்டறியப்பட்டிருக்கிறது.

காரணமின்றி உடல் குளிர்ச்சி அடைந்தது போன்ற உணர்வு, குளிர் தாங்க இயலாமல் உடல் நடுங்க தொடங்குதல், உடலுழைப்பு குறைந்திருக்கும் இந்த தருணத்திலும் தசை வலி ஏற்படுதல், திடீரென்று தோன்றும் தலைவலி, சுவை மற்றும் நறுமண உணர்வு குறைந்து போதல் இவைகளும் வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே மேற்கண்ட அறிகுறிகள் உள்ளவர்கள், உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

டொக்டர் ஸ்ரீதேவி.