(தி.சோபிதன்)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பமாக உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகள் முன்னர் அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் நீண்ட முயற்சிகளின் பலனாக யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் நோக்கில் யாழ் போதனா வைத்தியசாலையிலும் பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பல முயற்சிகளை முன்னெடுத்து வந்தோம். அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் பரிசோதனைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம். இதனூடாக நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என நம்புகின்றோம் என்றார்.