(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் தொழிலாளர்களுக்கு நடைமுறை சாத்தியமான சலுகைகளை பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்விடுத்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ இந்நாட்டுக்கு கிடைக்கப் பெறும் நிதியை உரியமுறையில் செலவிடுவதற்காக பாராளுமன்றத்தை கூட்டுமாறும், இதன்போது எந்த நிபந்தனையும் இன்றி, ஊதியமும் பெறாமல் மக்களின் நலனுக்காக செயலாற்றுவதற்கு அனைத்து எதிர்கட்சியும் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

தொழிலாளர் தினமான இன்றைய தினம் வரையிலான காலப்பகுதிவரை தொழிலாளர்களின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது.90 இலட்சம் அதிகமான தொழிலாளர்கள் இந்நாட்டில் இருக்கின்றனர். இவர்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வகையான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. இவர்களுள் 71 வீதமானோர் கம்பனிகள் மற்றும் தொழிற்சாலைகளில் கடமை புரிகின்றனர். இவர்களுக்கான நலன்களை கம்பனி மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களே நிறைவேற்றி வருகின்றனர். இதனால் இந்த உரிமையாளர்களுக்கு உரிய வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டாலே, அது தொழிலாளர்களை போய்சேரும். கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் இந்த உரிமையாளர்களுக்கான கடன்வசதிகள் மற்றும் அது தொடர்பான வர்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளதா? இந்நிலையில் அரசாங்கம் கடன்வசதிகளை வழங்கியுள்ளதாக அறிவித்து வருகின்றது. ஆனால் இந்த கடன்களை பெறுவதற்காக வங்கிகளுக்குச் சென்றால் பல ஆவணங்களை தேடுவதே பெரும் சிக்கலை தோற்றுவித்துள்ளது. ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றை பெற்றுக் கொள்வது என்பது எவ்வாறான கடினம் என்பதை அனைவரும் அறிவீர்கள்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் ஜனாதிபதி லீ கொன் யூ போன்று செயற்படுவார் என்றே மக்கள் எண்ணினார்கள். சிங்கப்பூர் ஜனாதிபதியை பொருத்தமட்டில் கடன்களை ஒழிப்பதே இலக்காக கொண்டிருந்தார். ஆனால் கோத்தாபய ஆட்சிக்கு வந்து பழைய ஆட்சியாளர்களுக்கே அமைச்சுப் பொறுப்புகளை கையளித்தார். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டு அப்போதைய அரசாங்கத்தில் இருந்த மோசடிதாரர்களுக்கே அமைச்சுப் பொறுப்புகளை பெற்றுக்  கொடுத்தது போன்று. தற்போது கடத்தல்கள் இல்லாமல் போயுள்ளதா? அனைத்து கடத்தல்களும் வழமைப்போன்றே இடம்பெறுகின்றன. இன்றும் பொலனறுவைக்குச் சென்று இந்த மக்களிடம் கேட்டாள் அங்க அரிசி கடத்தல் இடம்பெறுகின்றதா? என்பது தொடர்பில் சொல்வார்கள். அரசி கடத்தல் மட்டுமல்ல, போதைப்பொருள், கசிப்பு, மணல் போன்ற கடத்தல்கள் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றன.

கொரேனா வைரஸ் பரவல் தொடர்பில் உலகளாவிய ரீதியில் நெருக்கடி ஏற்பட்டிருந்த போதும், வெளிநாட்டிலிருந்து வருபவர்களை தடுப்பதற்காக எவ்வாறான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வில்லை. இதனால் தான் அரசியல் அறிவுமிக்க ஒருவர் ஜனாதிபதியாக தெரிவுச் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் அன்று தெரிவித்தோம். நாட்டின் ஆட்சியை ஜனாதிபதி மாத்திரமின்றி பாராளுமன்றமும் ஒத்துழைத்தே செயற்படுத்த வேண்டும். இவ்வாறு நெருக்கடியான நிலைமையில் ஜனாதிபதி மாத்திரம் செயற்படுவது என்பது சிக்கலை ஏற்படுத்தும் . அதனாலேயே இன்று பல அனுபவமிக்க தலைவர்கள் பாராளுமன்றத்தை கூட்டுமாறு வேண்டுகோள்விடுத்து வருகின்றனர். ஏன் ஜனாதிபதிக்கும், பிரமருக்கும் மாத்திரம் இதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியவில்லை. நாட்டுக்கு பெருந்தொகையான நிதி கிடைக்கப் பெற்றால் அதனை செலவிடுவதற்கான முறையொன்று உள்ளது.

சுகாதார அமைச்சரும், இராணுவத்தளபதியும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று தெரிவித்து வந்தார்கள் ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. இதனால் நாம் கொரோனாவுடன் இணைந்து வாழப்பழகிக் கொள்வோம் என்ற கருத்தை பரப்ப முயற்சிக்கின்றனர். கொரோனா விடம் இணைந்து வாழ்வோம். நபர்களுக்கிடையிலான இடவெளியை பேணிக் கொண்டு எமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்போம். ஆனால், இதனை தேர்தலை அடிப்படையாக கொண்டு மாத்திரம் செயற்படுத்த முன்வரவேண்டாம். நாட்டை பெரும் நெருக்கடி நிலைக்கும் தள்ள வேண்டாம். தயவு செய்து தாமரை மொட்டை அமங்கல மொட்டாக அர்த்தப்படுத்த முனைய வேண்டாம்.

அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தத்திற்கமையவே ஜனாதிபதி பாராளுமன்றத்தை களைத்துள்ளதாக அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்திருந்தார். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஜனாதிபதியே பொறுப்புக் கூறவேண்டும். டிசம்பர் மாதமே கொரோனா வைரஸ் பரவி வருவதாக அறிந்திருந்த போதும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை தடுப்பதற்கு எவ்வாறான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. அப்போது நாட்டை மூடியிருந்தால் வைரஸ் பரவலை தடுக்க முடிந்திருக்கும். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் தேர்தலை நடத்த முயற்சிப்பதாலேயே எதிர்ப்புகள் தோற்றம் பெற்று வருகின்றன. அனைத்து எதிர்கட்சியும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை வைக்கும் போது அரசாங்கத்திற்கு மாத்திரம் ஏன் ஒத்துழைப்பு வழங்க முடியாது.

இலங்கை மக்கள் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ள காலத்திலும் சிக்கல் இன்றி, உணவுகள் உண்டு வழ்வதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 மாத்திரம் போது மானதல்ல, எமது நாட்டின் கலாச்சரமே மக்களை பாதுகாத்து வருகின்றது.

அயல் வீட்டுக்காரர் பட்டினியில் இருக்கின்றார்கள் என்றால் அவருக்கு தம்மிடம் இருக்கும் உணவை பெற்றுக்கொடுக்கும் பண்பை நாம் கொண்டிருக்கின்றோம். அதுவே இன்று நாட்டில் பலரையும் பாதுகாத்துள்ளது.இதேவேளை நாட்டில் பெரும்பாலானோர் நாளாந்தம் ஊதியம் பெருபவர்களே இருக்கின்றனர். இவர்களுக்கு எந்த வங்கியிலும் கடன்களை பெற்றுக் கொள்ள முடியாது. அதனால் இந்த நெருக்கடியான நிலையில் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு தேவையான சலுகைகளை பெற்றுக் கொடுப்பது என்றால் நடைமுறை சாத்தியமான செயற்பாடுகளை முன்னெடுங்கள். இந்த நெருக்கடியான நிலையில் பாராளுமன்றத்தை கூட்டி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுங்கள்.இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்க தேவையில்லை. மக்களுக்கான சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்கட்சிகள் எந்த வித நிபந்தனையும் இன்றி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை பெற்றுக் கொடுக்க தயாராக இருக்கின்றன.