இங்கிலாந்து கிரிக்கெட் சபையால் இவ்வாண்டு ஆரம்பிக்கப்படவிருந்த ‘தி ஹண்ட்றட் ’கிரிக்கெட் தொடர் 2021ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  இங்கிலாந்து கிரிக்கெட் சபை செய்தி வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டானது டெஸ்ட், சர்வதேச ஒருநாள் போட்டி, சர்வதேச இருபதுக்கு 20 என பல்வேறு வடிவங்களில் விளையாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அணிக்கு தலா 100 பந்துகள் கொண்ட புதிய தொடரொன்றை இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஆரம்பிக்கவிருந்ததுடன், இதற்காகன வீர, வீராங்கனைகளுக்கான ஏலமும் நடைபெற்றிருந்தது.

இந்நிலையில், உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இத்தொடர்  அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி , ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 8 அணிகள் பங்கேற்கும் வகையில் ‘தி ஹண்ட்றட் ’ கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விடயம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொம் ஹெரிசன் கூறுகையில்,

“ இத் தொடரை ஒத்திவைப்பதற்கு நாம் எடுத்துள்ள இந்த முடிவு,  கடந்த இரண்டு வருடங்களில் எங்களால் மேற்கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த பெரும் ஏமாற்றமாகும். எனினும், நாட்டின் தற்போதைய நிலையை பொருத்தவரை  இவ்வாறான முடிவு ஏற்றுக்கொள்ளக்கூடியது.

ஆனால், எதிர்வரும் ஆண்டில் மிகவும் உற்சாகத்துடன் இந்த தொடரை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.  ‘தி ஹண்ட்றட் ’  தொடரை நடத்துவதற்கான அனைத்து தயார்படுத்தல்களையும் மேற்கொண்டுள்ள போதும் எங்களால் இத்தொடரை நடத்த முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது' என்றார்.

இதேவேளை, சமுக இடைவெளி மற்றும் சர்வதேச  பயணங்கள் தொடர்பான விடயங்களை கருத்திற்கொண்டு   ‘தி ஹண்ட்றட் ’  கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  புத்தம் புதிய தொடர் ஒன்றை ரசிகர்கள் இல்லாமல் நடத்துவது கடினம் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.