(செ.தேன்மொழி)

பாணந்துறை மற்றும் தலங்கம ஆகிய பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் ஊழல் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாக்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை - களுந்தேவல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 15 ஆயிரம் மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் 22 இலட்சத்து 53 ஆயிரம் மில்லி லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை தலங்கம பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் கோடாவுடன் மேலும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோகந்தர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 5 இலட்சத்து 25 ஆயிரத்து 750மில்லி லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.