தென் கொரியா - தலைநகர் சியோலுக்கு தெற்கே இச்சியோனில், புதிதாகத நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டிடத் தொகுதியில் இன்று (புதன்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில்  38 அதிகமான தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் கொரியாவில் அண்மைகாலத்தில் ஏற்பட்ட  மிக மோசமான தீ விபத்தாக  இது பதிவாகியுள்ளது.

குறித்த கட்டுமானத்தில் உள்ள கிடங்கிற்குள் அதிகமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர்.   

திடீர் தீ விபத்து காரணமாக அதிகமான தொழிலாளர்களுக்கு தப்பிக்க போதிய அவகாசம் இருந்திருக்காத நிலையில், இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

400 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் மீட்புப் பணியாளர்களும் பல மணி நேரம் போராடி பின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை சுமார் 120 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இவ் விபத்தில் 30 தொழிலாளர்கள் காயங்கள் ஏதுமின்றி தப்பியுள்ளனர்.

எனினும்  இதுவரை 38 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் மேலும் பல தொழிலாளர்கள் பலத்த காயங்களுடன் அருகிலுள்ள வைத்தியசாலைகளில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 குறித்த கட்டுமானத்தின் நிலத்தடி மட்டத்தில் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட வெடிப்பினால் குறித்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.