(இரா.செல்வராஜா)

நீர் மற்றும் மின்சார கட்டணங்களை அறவிடும் போது பொதுமக்களுக்கு சலுகை பெற்றுக் கொடுக்கும் வகையில் குறைந்தளவிலான கட்டணத்தை அறவிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது,

நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸினால் அனைத்து மக்களினதும் வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நாளாந்தம் ஊதியம் பெறுபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அவர்கள் உணவை பெறுவதற்கே பெரிதும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.அவர்களது கடன்சுமைகளும் அதிகரித்துள்ளன. வீட்டு வாடகைகளும் செலுத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில் நீர் மற்றும் மின்சாரம் கட்டணங்களை செலுத்துவதில் பாரிய பிரச்சினையை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த கட்டணங்களை அரைவாசியாக அறவிடுவதுடன், இரு மாத கட்டணங்களையும் சேர்த்து அறவிடாமல் தனித்தனியாக அறவிடவேண்டும்.

சேவை வரி உட்பட அனைத்து வரிகளையும் கட்டணப்பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்.இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கரா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் கவனம் செலுத்த வேண்டும்.