(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அரசாங்கம் கவனயீனமாக செயற்பட்டதன் காரணமாகமே, வைரஸ் பரவலினால் பெரும் நெருக்கடி நிலைமையை தற்போது எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்ராணி பண்டார, வைரஸ் தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.எதிர்க்கட்சி தலைவர் அலுவகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கொவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த ஜனவரி மாதத்தின் இறுதிப் பகுதியிலேயே பாராளுமன்றத்தில் உரையொன்றை நிகழ்த்தினார். இதன்போது ஆளும் தரப்பினர் அதனை பொருட்படுத்தியதாக தோன்றவில்லை. கொரோனா தொற்று தொடர்பில் எதிர்நோக்கவேண்டி ஏற்படக்கூடிய நெருக்கடி நிலைமைகளை கருத்திற் கொள்ளாது அரசாங்கம் செயற்பட்டதன் விளைவே  நாட்டு மக்கள் இன்று பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர்.

வைரஸ் தொற்றுத்தொடர்பில் எதிர்க்கட்சி பேசினால் தேர்தலுக்கு பயந்தே கொரோனா தொற்று தொடர்பில் பேசுவதாக சிலர் சித்தரித்து வருகின்றனர். ஆனால் எமக்கு தேர்தல் தொடர்பில் எந்த அச்சமும் கிடையாது. வைரஸ் தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதே எமது பிரதான நோக்கமாகும். வைரஸ் தொற்றினால் 619 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் ஊடாக அறியமுடிகின்றது. இந்த தொற்றாளர்களில் கடற்படையினரும், இராணுவத்தினரும் காணப்படுகின்றனர்.  வைரஸ் தொற்றிலிருந்து நாட்டையும் இ நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக தமது உயிர்மீதும் கவனம் செலுத்தாது முப்படையினர் பெரும் சேவையாற்றி வந்தனர் இவர்களை பாதுக்காக்க வேண்டியது எமது கடமையாகும்.

அரசாங்கம் வைரஸ் பரவலை தடுப்பதற்காக செயற்படுத்தி வரும் செயற்பாடுகள் தொடர்பில் திருப்தியற்ற நிலமை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அமுல்படுத்தியுள்ள பகுதிகளில் அது முறையாக செயற்படுத்தப்படுகின்றதா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்படாத பகுதிகளிலும் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்படுக்கின்றனர். இதனால் இந்த செயற்பாடுகள் தொடர்பில் விளக்கம் தேவைப்படுகின்றன.

இதேவேளை அநுராதபுர மாவட்டத்தில் 11 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இங்கு வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்படாத நிலையிலேயே ஊரடங்கு செயற்படுத்தப்பட்டது.  தற்போது எவ்வாறு அங்கு வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில் இதனால் அநுராதபுரத்தையும் இடர்வலையமாக பிரகடணம் படுத்தி  அங்கு ஏற்படக்கூடிய நெருக்கடி நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் முறையான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக எமக்கு தோன்ற வில்லை.

அரசாங்கம் எவ்வாறு செயற்பட்டாலும் மக்கள் தங்களது பாதுகாப்பை உறுதி படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கமைய ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள காலத்திலும் வர்த்தக நிலையங்களை மூடி வைப்பதற்காக வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளதுடன், மூன்று நாட்களாக அதனை செயற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். அதனால் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி அநுராதபுரத்தையும் இடர்வலையமாக பிரகடணப்படுத்தி  மக்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.