தங்கள் பிள்ளைகளை கடத்தியது மஹிந்த அரசு, அந்த கடத்தல்காரர்களை காப்பாற்றுவது மைத்திரி அரசு,  நிலைமாறு காலகட்ட நீதிப்பொறிமுறை எனும் பெயரால் இந்த உண்மைகள் மறைக்கப்படுவதை பகிரங்கப்படுத்தி, வவுனியா மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று சனிக்கிழமை காலை  கவனவீர்ப்பு போராட்டம்  நடத்தப்பட்டுள்ளது. 

கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்டச் சங்கமும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும் இணைந்து குறித்த கவனவீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தன. 

நிலைமாறு காலகட்ட நீதிப்பொறிமுறை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு அனைத்துலக ஏமாற்று நாடகம், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத என்.ஜி.ஓக்களை திருப்திப்படுத்தும் ஓ.எம்.பி அலுவலகம் வேண்டாம், சர்வதேச நீதிபதிகள் பெரும்பான்மையாக உள்ளடங்கிய ஒரு நிபுணத்துவ விசாரணைக் கமிட்டியே வேண்டும், இலங்கையில் சாட்சியங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை ஆட்கடத்தல்களும் சித்திரவதைகளும் மனிதகுலப் படுகொலைகளும் தொடர்கின்றன, ஐ.நாவே நாங்கள் நாதி இனமா? - எங்களுக்கு நீதி இல்லையா?, எங்கள் உறவுகளை கொன்றவனையே நீதிபதி ஆக்கும் கொடுமை பாரீர், இரகசிய சித்திரவதை முகாம்களை அம்பலப்படுத்து –எங்கள் உறவுகளை வீட்டுக்கு அனுப்பு, திருகோணமலை கோத்தா கப்பல்படை சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 700க்கும் அதிகமான போராளிக் குடும்பங்களுக்கு நடந்தது என்ன? முள்ளிவாய்க்காலில் ஒப்படைத்த எங்கள் உறவுகளின் கதி என்ன?, இனப்பிரச்சினைக்கு பொதுசன வாக்கெடுப்பு - இனப்படுகொலைக்கு பரிகாரநீதி வேண்டும்.’ என்று வலியுறுத்தி சுலோக அட்டைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். 

இந்த கவனவீர்ப்பு போராட்டத்தில்,  அரசின் ஆட்கடத்தல் மற்றும் தடுத்து வைத்தல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களும், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.