சிரியாவில் எரிபொருள் நிரப்பப்பட்ட லொறியொன்று மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் துருக்கிய ஆதரவு கிளர்ச்சிப் போராளிகள் உட்பட குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் மற்றும் சிரியாவின் மனித உரிமைகளுக்கான ஆய்வகம் தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதலானது செவ்வாய்க்கிழமை சிரியாவின் வடமேற்கு நகரமான அஃப்ரினில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வீரர்களும் மீட்பு படையினரும் போராடி வந்துள்ளனர்.

இந்த தாக்குதலினால் இதுவரை 46 பேர் உயரிழந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் மேலும் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்ளுள் குறைந்தது ஆறு துருக்கிய சார்பு சிரிய போராளிகளும் அடங்குவதாகவும், 11 குழந்தைகள் உள்ளடங்குவதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோராத நிலையில் குர்தீஷ் மக்கள் பாதுகாப்பு அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என துருக்கி குற்றம்சாட்டியுள்ளது.

Photo Credit : the gurdian