ஸ்லம்டொக் மில்லியனர், இன்பர்னோ (inferno), லைப் ஆப் பை (life of pi)ஆகிய ஹொலிவூட் படங்களிலும் பிகு ((pigu)) உள்ளிட்ட பொலிவூட் படங்களிலும் நடித்துள்ள பிரபல நடிகர் இர்பான்கான் உயிரிழந்துள்ளார்.

இர்பான் கானுக்கு புற்றுநோய் இருப்பது கடந்த 2018 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஊரடங்கு உத்தரவால் மும்பையில் இருந்த இர்பான் கானின் உடல்நலம் நேற்று திடீரென்று மோசமானது.

இதையடுத்து மும்பையில் உள்ள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  இர்பான்  இன்று உயிரிழந்தார்.

53 வயதான இவருக்கு, சுதாபா என்கிற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். 2011ம் ஆண்டிற்கான இந்திய அரசின் உயர்ந்த ஃவிருதகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ ’விருது பெற்றவர். இவரின் இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு, திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே நடிகர் இர்பான் கானின் தாயாரான சயீதா பேகம், அண்மையில் ஜெய்ப்பூரிலுள்ள அவரது இல்லத்தில் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார்.

அவரின் முகத்தை கடைசியாக நேரில் பார்க்க முடியாமல் வீடியோ அழைப்பின் மூலம் பார்த்து அழுதார் இர்பான். தாய் இறந்த 3 நாட்களில் மகனும் இறந்துள்ளது ரசிகர்களை கவலை அடையச் செய்திருக்கிறது.

இவரது நடிப்பில் வெளியான ‘ஹிந்தி மீடியம்’ என்ற திரைப்படம் இந்தியாவில் மட்டுமல்லாமல், சீனாவிலும் வெளியாகி பெரும் வசூலையும், வரவேற்பையும் பெற்றது.

புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றபோது இர்பான் நடித்த அங்ரேஜி மீடியம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.