பங்களாதேஷில் பிரபல பத்திரிகையின் தலைமை செய்தியாளர் ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் நேற்று  செவ்வாய்க்கிழமை இரவு தலைநகர் டாக்கா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 

பங்களாதேஷ் நாட்டின் பிரபல பத்திரிகை நிறுவனம் டெய்னிக் சமோயர். இதில் நகர செய்தி ஆசிரியரும், பத்திரிகையின் தலைமை செய்தியாளராக பணியாற்றி வந்தவர் ஹுமாயூன் கபீர் கோகன் (47).

இவர் சுவாச பிரச்சினை மற்றும் தலைவலி, கொரோனா நோய்த்தொற்று போன்ற அறிகுறிகளுடன் தலைநகர் டாக்காவில்  உத்தரா பகுதியில் உள்ள வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். 

வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் நிர்வாக இயக்குநர் எம்.டி.ஷேத் கூறியுள்ளார்.

மேலும் அவர் ஏற்கெனவே ஆபத்தான நிலையில் இருந்தார் என்றும், " அவருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருந்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம், ஆனால் நோயைக் கண்டறிவதற்கு முன்பாகவே அவர் உயிரிழந்துவிட்டார்" என்று வைத்தியசாலையில் நிர்வாக இயக்குநர் ஷேத் கூறியுள்ளார்.

பங்களாதேஷில் கொரோானா வைரஸ் தொற்றினால் 6462 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 155 பேர் உயிரிழந்துள்ளார்கள். அதேவேளை 139 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.