(க.கிஷாந்தன்)
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா மாணிக்கவத்தை தோட்டத்திலிருந்து 17 வயதுடைய பத்மநாதன் அஜித்குமார் கொழும்புக்கு தொழிலுக்காக சென்றிருந்த வேளையில் நேற்று முன்தினம்  தொழில் செய்துக்கொண்டிருந்த இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச் சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த சிறுவனின் உறுவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இச்சிறுவன் சிறுவயதிலிருந்து டிக்கோயா இன்வெறி தோட்டத்தில் தனது பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளான். இவனின் பெற்றோர்களான தந்தை பத்மநாதன், தாயான செல்வசுந்தரி ஆகியோர் தொழில் நிமிர்த்தம் கொழும்பில் வேலை செய்கின்றனர்.

பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்த சிறுவனை மேற்படி தோட்டத்தில் உள்ள நபர் ஒருவரினால் பாட்டியின் விருப்பத்துடன் தொழிலுக்காக கொழும்பு கிருலப்பனை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளார்.

குறித்த நபர் பாட்டியிடம் அதிகபடியான சம்பளம் வழங்கப்படும் எனவும், இச்சிறுவனுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது என கூறியதன் காரணமாக பாட்டியும் இதனை நம்பி தனது அரவணைப்பில் வாழ்ந்த இச்சிறுவனை அனுப்பி வைத்துள்ளார்.

இச்சிறுவன் தொழிலுக்கு சென்ற சம்பவம் பெற்றோர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. சிறுவன் தொழில் செய்த இடத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு 3000 ரூபா மாத்திரமே தனக்கு கிடைத்ததாக பாட்டி தெரிவிக்கின்றார்.

இவ் வேளையில் கடந்த 22ஆம் திகதி சிறுவன் வேலை செய்யும் இடத்திலிருந்து தொலைபேசி மூலம் பாட்டிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. மேற்படி சிறுவனுக்கு சுகயீனம் காரணமாக உடனடியாக கொழும்புக்கு வருமாறு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனின் பாட்டி கொழும்புக்கு சென்றுள்ளார்.

சிறுவனை வேலைக்கு அழைத்து சென்ற நபரின் ஊடாக உயிரிழந்த சிறுவனின் சித்தப்பாவிற்கு 23ஆம் திகதி தொலைபேசி மூலம் சிறுவன் அஜித்குமார் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாகவும், இவரின் சடலம் புஞ்சி பொரளையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து இவரின் சித்தப்பா சிறுவனின் பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து சம்மந்தப்பட்டவர்கள் கொழும்பு சென்ற போது அங்கு எவ்வித விசாரணகளும் மேற்கொள்ளாமல் உயிரிழந்த சிறுவனின் சடலத்தை  கொண்டு செல்லுமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்தாலும், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பெற்றோர்களுக்கு உறவினர்களுக்கும் தெளிப்படுத்தவில்லை எனவும், அனைத்து விடயங்களையும் குறித்த பாட்டியிடம் கூறியுள்ளதாகவும், உறவினர்களிடம் சடலத்தை கொண்டு செல்லுமாறு பொலிஸார் சடலத்தை ஒப்படைத்துள்ளனர்.

இருந்தபோதிலும் சிறுவன் உயிரிழந்ததத்திற்கான காரணம் சரியாக தெரியாத காரணத்தினால் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கும் உறவினர்கள் இது தொடர்பாக நாரான்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது இவர்களின் புகாரை ஏற்றுக்கொள்ள பொலிஸார் மறுத்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் இன்று டிக்கோயா மாணிக்கவத்தை தோட்டத்தில் உள்ள பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இச்சிறுவனின் மரணம் குறித்து தோட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளதோடு சிறுவனின் மரணம் தொடர்பான உரிய காரணங்களை விசாரணைகள் நடத்தி தீர்வினை பெற்று தர நடவடிக்கை எடுக்குமாறு உயிரிழந்த சிறுவனின் உறவினர்கள் கோருகின்றனர்.