கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னரான அதிக நெரிசல் கொண்ட கால்பந்து போட்டி அட்டவணைகளுக்கேற்ப போட்டி ஒன்றில் பயன்படுத்த முடியுமான பதில் வீரர்களின் எண்ணிக்கையை ஐந்தாக அதிகரிப்பதற்கு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (பீபா) பரிந்துரைத்துள்ளது.

வழக்கமாக போட்டியொன்றில் மூன்று வீரர்களையே பதில் வீரர்களாக பயன்படுத்த முடியும் என்பது போட்டி விதியாகும். எனினும், கொவிட்-19 தொற்றினால் சர்வதேச அளவில் கால்பந்தாட்ட லீக்குகள் மற்றும் சர்வதேச போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், வீரர்கள் மீதான சுமையை குறைப்பதற்காக ஐந்து பதில் வீரர்களை போட்டியில் உள்ளீர்க்க போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு பீபா பரிந்துரை செய்துள்ளது. 

குறுகிய காலத்துக்குள் அதிக போட்டிகளை நடத்த வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதால், கால்பந்தாட்ட விதிகளை நிர்ணயிக்கும் அமைப்பானது (IFAB) அதிக பதில் வீரர்களை போட்டியில் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த ஒப்புதல் குறித்த இறுதி தீர்மானத்தை போட்டி ஏறுபாட்டாளர்கள் எடுக்க வேண்டும் என என பீபா குறிப்பிட்டுள்ளது. 

'வழமைக்கு மாறாக தொடர்ச்சியான போட்டிகளில் வீரர்கள் விளையாடுவார்கள் என்பதால், அவர்கள் மீதான சுமை காரணமாக உபாதை ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதும் இது தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கான காரணங்களில் ஒன்றாகும்' என்று பீபா  வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.    

'போட்டியின்போது ஒவ்வொரு அணிக்கும் ஐந்து பதில் வீரர்கள் பயன்படுத்த தற்போது வாய்ப்பு அளிக்கப்படுவதோடு, முதல்பாதி இடைவேளை உட்பட அதிக பட்சம் மூன்று பகுதிகளில் பதில் வீரர்கள் பயன்படுத்த முடியும். மேலதிக நேரத்தின்போது எஞ்சிய ஒரு மேலதிக வீரரை வைத்திருப்பதற்கும் வாய்ப்பு அளிக்கப்படும்' என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ் விதியானது 2021 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதி வரை இந்த பருவக்காலம்,  அடுத்த ஆண்டு பருவம் மற்றும் சர்வதேச போட்டிகளில் உள்ளீர்க்கப்படும் விதியாக அமையும்.