பங்களாதேஷின் டாக்கவிலிருந்து 73 இலங்கை மாணவர்கள் இன்று இரவு நாடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பங்களாதேஷின் டாக்காவில் சிக்கித் தவித்த 73 இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பங்களாதேஷிற்கு புறப்பட்டது.

யு.எல் -1422 என்ற ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் குறித்த மாணவர்கள் அனைவரும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.

ஏழு ஊழியர்களுடன் டாக்கா நோக்கி புறப்பட்ட குறித்த விமானம் இன்று இரவு 9 மணியளவில் 73 மாணவர்களையும் அழைத்துக்கொண்டு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தது.

இவ்வாறு அழைத்துவரப்பட்ட மாணவர்கள் விமான நிலையத்தில் கிருமி நீக்கம் செய்யப்பட்டு கொவிட் -19 அறிகுறிகள் உள்ளதா என்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின் சிறப்பு பஸ்களில் இராணுவத்தினரால் தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.