( எம்.எப்.எம்.பஸீர்)

எம்பிலிபிட்டிய நீதிவான் நீதிமன்றின் பெண் நீதிவான் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

நீதிவானின் கணவர், வெலிசறை கடற்படை முகாமில் சேவையாற்றும் நிலையில் கடந்தவாரம் அவர் எம்பிலிபிட்டிய நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கிருந்தமை தெரியவந்துள்ள நிலையிலேயே,  இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  கபில கன்னங்கர  தெரிவித்தார்.

நீதிவானின் கணவருக்கு கொரோனா இருப்பது இதுவரை உறுதியாகாத போதும், அவர் வெலிசறை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே கடந்த 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை அந்த அதிகாரி, எம்பிலிபிட்டிய நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தனது மனைவியான நீதிவானுடன் ஒன்றாக  தங்கிருந்துள்ளமையால்  நீதிவானை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நீதிமன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட, நீதிவானின் பாதுகாப்புக்கு என இருந்த  உத்தியோகத்தர் உள்ளிட்ட 7 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  இவர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கே உட்படுத்தப்பட்டுள்ளனர்.