(ஆர்.யசி)


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவும் வீதம் அதிகரித்துள்ள காரணத்தினால் பழைய தீர்மானங்களை இனியும் முன்னெடுக்க முடியாது. ஊரடங்கை தளர்ப்பதன் மூலமாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது என்கிறது அரச மருத்தவ அதகாரிகள் சங்கம். தனி நபர்கள், தனி சமூகத்தின் இடையில் வைரஸ் பரவ இடமளித்தால், அடுத்த மாத இறுதிக்குள் நாடு மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும், அவ்வாறான அச்சம் நிலவுகின்றது எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கைகள் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் இருக்கின்ற நிலையில் தற்போதைய நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே இவற்றை கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,கொவிட் -19 வைரஸின் மூலமாக உலக நாடுகள் பல இன்று எதிர்கொள்ளும் சமூகத்தின் இடையிலான வைரஸ் பரவல் அச்சுறுத்தலை இலங்கை இப்போதுவரையில் சந்திக்கவில்லை. சமூகத்தின் இடையில் வைரஸ் பரவ ஆரம்பித்தால், அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக அமையும்.

எனினும் இலங்கையில் இப்போது வரையில் அவ்வாறான ஒரு நிலைமைக்கு செல்லவில்லை என்பது ஆரோக்கியமான விடயமாக கருதப்பட வேண்டும்.

நாட்டில் நோயாளர்களை சரியாக அடையாளம் கண்டால் மட்டுமே எம்மால் சமூகத்தில் நோய் பரவல் ஏற்படாத வகையில் தடுக்க முடியும். சமூகத்தில் பரவ ஆரம்பித்தால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனினும் இப்போது நிலைமைகள் சுமூகமாக உள்ளதாக கருதி மக்கள் வழமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. நாட்டில்  இப்போதும் நிலைமைகள் மோசமானதாக உள்ளது.

இலங்கையில் இப்போதும் கொவிட் -19 வைரஸ் பரவல் உள்ளது. அதுவும் அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களின் 80 வீதமான நபர்களுக்கு நோய் தொற்றுக்கான எந்தவித அடையாளமும் காட்டவில்லை.

இது மிகவும் அச்சுறுத்தலானது. எனவே அனைவருக்கும் பரிசோதனைகளை செய்வதே நோயாளர்களை அடையாளம் காண தற்போது எமக்கிருக்கும் ஒரே வழிமுறையாகும். இப்போது போன்று குறைந்த அளவிலான பரிசோதனைகள் செய்துகொண்டிருந்தால் மே மாதம் இரண்டாம் வாரமளவில் இலங்கையின் நிலைமைகள் மேலும் பாரதூரமானதாக அமையும். இப்போது எவ்வாறான நிலைமை நாட்டில் உள்ளதென்பதை மக்களுக்கு தெளிவாக எடுத்துக்கூற வேண்டும்.

அதுமட்டும் அல்லாது இப்போது நோயினை கட்டுப்படுத்த எவ்வாறான மருந்துகள் வேண்டும் என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறான தொற்றுநோய்களை பொறுத்தவரை உடனடியாக தீர்வுகளை காண வேண்டுமே தவிர எதிர்வுகூறிக்கொண்டிருக்க முடியாது.

இன்று நாட்டில் இருக்கும் நிலைமை நாளை இருக்கப்போவதில்லை. நாளை நோய் தொற்று மேலும் அதிகரிக்கலாம். எனவே பி.சி.ஆர் பரிசோதனைகளை மேலும் அதிகரித்து நோயாளர்களை அடையாளம் காணவேண்டும். தொடர்ச்சியாக இதனையே நாம் கூறி வருகின்றோம்.

பரிசோதனைகளை முறையாகவும் துரிதமாகவும் அதேபோல் அதிகளவிலும் முன்னெடுக்காது போனால் இப்போதைக்கு நாட்டினை வழமைக்கு கொண்டுவர முடியாது. ஊரடங்கை நீக்கவும் முடியாது. மேலும் மூன்று நான்கு மாதங்களுக்கு மேலாகவும் இவ்வாறான கட்டுப்பாடுகளுடன் நாட்டினை கொண்டுபோகவேண்டிவரும். ஆகவே அரசாங்கம் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வளவு காலமாக எம்மால் கட்டுபடுத்த முடியும் என நினைத்த, துரிதமாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்க கைகொடுப்பார்கள் என எதிர்பார்த்த பாதுகாப்பு படையினருக்கு இப்போது கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளமை பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.  தொற்றுநோயளர்கள் இல்லாத பல பகுதிகளிலும் இன்று கொரோனா வைரஸ் தொற்றுநோயளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

ஆகவே யார் என்ன கூறினாலும் பழைய தீர்மானங்களை இனியும் முன்னெடுக்க முடியாது. நாட்டினை வழமைக்கு கொண்டுவரலாம் என இனியும் கூற முடியாது. சமூக இடைவெளியை மேலும் கையாள வேண்டும். இல்லையேல் அடுத்த மாத இறுதிக்குள் நிலைமை மிகவும் மோசமாக அமையும். அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை நீக்க பல காரணிகள் இருக்கலாம் ஆனால் ஊரடங்கு சட்டத்தை நீக்கி நோயிலிருந்து விடுபட முடியாது.

இது சுகாதார தரப்பின் நிலைப்பாடு. பாதுகாப்பு படைகளில் ஒரு சிலருக்கு நோய்தொற்று இருப்பதால் ஒட்டுமொத்த பாதுகாப்பு படைகளையும் முகாம்களுக்குள் அடைக்க முடியாது. இந்த போராட்டத்தில் பாதுகாப்பு படைகளின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம். ஆகவே முதலில் நோய்தொற்று உள்ளதாக அடையாளம் காணப்பட்ட பாதுகாப்பு படையினரை தனிமைப்படுத்த வேண்டும். ஏனையவர்களை பயன்படுத்த முடியும். இதில் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையும் இல்லை.

அடையாள அட்டையை பயன்படுத்தி இப்போது கட்டுபாடுகளுடன் கூடிய  மக்கள் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையில் அதில் நாம் எதனையும் கூற முடியாது. அரசாங்கம் பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு தீர்மானம் எடுக்கும். எனினும் நாம் இவ்வாறான செயற்பாடுகளின் மாற்று நடவடிக்கையை வலியுறுத்தினோம். இலக்கங்களை கொண்டு அனைவரையும் வீதியில் இறங்க அனுமதித்தால் நிலைமை மோசமாக அமையும். இது நோயை கட்டுப்படுத்த முன்னெடுத்த வேலைத்திட்டம் அல்ல. எனினும் ஒரு சில தினங்கள் பார்த்து இது குறித்து தீர்மானம் எடுக்க முடியும். நாம் கூறும் காரணிகளை ஜனாதிபதி செவிமடுகின்றார். ஆகவே அவரின் ஒத்துழைப்புகளுடன் அடுத்த கட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.