ஊரடங்கு வேளையில் இறைச்சிக்காக ஐந்து ஆடுகளை லொறியில் ஏற்றிச்சென்ற மூவரை தலவாக்கலை பொலிஸார் இன்று (27.04.2020) அதிகாலை கைது செய்துள்ளனர்.

நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி சிறியரக லொறியொன்றில் ஆடுகள் சகிதம் இவர்கள் பயணித்துக்கொண்டிருக்கையிலேயே, தலவாக்கலை நகரில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.ஊரடங்கு வேளையில் பயணிப்பதற்கான அனுமதி பத்திரம் இன்மை, ஊரடங்கு சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதான இவர்கள், நுவரெலியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றைய நபர் கொட்டகலைப் பகுதியை சேர்ந்தவரென்றும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.