ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் நமது கனவு என ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். டி20  கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு ஆரம்பமானதுவரை வேறு எந்த அணிக்கும் மாறாமல் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் விராட் கோஹ்லி. மூன்றுமுறை இறுதிப் போட்டியில் விளையாடியபோதிலும், ஒரு முறை கூட கிண்ணத்தை வென்றதில்லை.

நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் ஏனோ அந்த அணிக்கு ஐ.பி.எல். மகுடம் எட்டாக்கனியாகவே உள்ளது. இந்நிலையில், அவ்வணியின் நட்சத்திர வீரர்களான கோஹ்லி, ஏ.பி.டி வில்லியர்ஸ் இருவரும் சமூக வலைத்தளத்தில் உரையாடியிருந்தனர். அதில், விராட் கோஹ்லி தெரிவித்துள்ளதாவது,

“பெங்களூர் அணியுடனான 12 ஆண்டு கால பயணம் வியப்புக்குரியது. நம்ப முடியாத ஒன்று. நீங்கள் (டி வில்லியர்ஸ்)9 ஆண்டுகள் எங்களுடன் இருக்கிறீர்கள். எங்களது வீரர்கள் அனைவரினதும் இலட்சியம் ஐ.பி.எல். கிண்ணத்தை கையில் ஏந்த வேண்டும் என்பது தான். மூன்று முறை நெருங்கி வந்து தவற விட்டிருக்கிறோம். ஒருங்கிணைந்து அதை கைப்பற்றுவதுதான் நமது கனவு” என்றார்

இருவரும் இணைந்து தாங்கள் விளையாடிய காலத்தில் இந்திய, தென் ஆபிரிக்க ஒருநாள் போட்டி வீரர்களை கொண்ட சிறந்த பதினொருவர் அணியை தெரிவு செய்தனர்.

அந்த கனவு அணியில் சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, டி வில்லியர்ஸ், ஜெக் கலிஸ், யுவராஜ் சிங், தோனி (அணித்தலைவர்- விக்கெட் காப்பாளர்), யுஸ்வேந்திர சாஹல், ஸ்டெய்ன், ஜஸ்பிரித் பும்ரா, ரபடா ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். பயிற்றுநர் -  கெரி கேர்ஸ்ன்