முன்னாள் அமைச்சர் மயோன் முஸ்தபாவின் வாகனம் மட்டக்களப்பில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

மட்டக்களப்பு அரசடி சுற்றுட்டத்திற்கு முன்பாகவே குறித்த விபத்துச் சம்பவம் இன்று (27.04.2020) இடம் பெற்றுள்ளது.

மேற்படி விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடந்த கொரோனா சம்பந்தமான கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு, அவரின் வசிப்பிடமான கல்முனையை நோக்கி சென்று கொண்டிருக்கும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு அரசடி சுற்றுவட்டத்தில் வைத்து குறித்த கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முன்னால் இருந்த கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மதிலினை உடைத்துக்கொண்டு பல்கலைக்கழக வளாகத்திற்குள் கார் நுழைந்துள்ளது.

விபத்து ஏற்படும் போது மயோன் முஸ்தபாவும் அவரது மருமகளும் காரில் பயணித்துள்ளதுடன் காரினை மயோன் முஸ்தபாவே செலுத்தி வந்துள்ளதாக அறியமுடிகின்றது.

காரில் பயணித்த எவருக்கும் எவ்விதமான சேதமும் ஏற்படவில்லை. கார் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.