ராஜீவ் காந்தி வழக்கில் இந்தியாவின் வேலூர் சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முருகன் என்கிற ஸ்ரீகரனின் தந்தை வைரவப்பிள்ளை வெற்றிவேலு இன்று காலை யாழ்ப்பாணத்தில் காலமானார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அவரின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இவர்கள் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. தமிழக அரசும் விடுதலை செய்யும் முடிவில் உள்ளது.

ஆனாலும், ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காத காரணத்தால் ஏழு பேரின் விடுதலையும் தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், முருகனின் தந்தை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.

இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவசர கடிதமொன்று  முருகனின் வழக்கறிஞர் புகழேந்தியால் நேற்று முன்தினம் அனுப்பிவைக்கப்பட்டது.

அந்தக் கடிதத்தில், “முருகன் என்கிற ஸ்ரீகரனின் தந்தை வெற்றிவேல் (75) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. தந்தையின் முகத்தைக் கடைசியாகப் பார்க்க சிறையில் உள்ள முருகனுக்கு மனிதாபிமான அடிப்படையில் வீடியோ கோல் அனுமதி வழங்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில், முருகனின் தந்தை இன்று அதிகாலை 3.30 மணியளவில் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

கடைசியாகத் தந்தையின் உடலையாவது ஒரு முறை பார்க்க வீடியோ கோல் அனுமதி வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலமாகச் சிறையில் உள்ள முருகனும் இலங்கையில் உள்ள அவரின் குடும்பத்தினரும் தமிழக அரசுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, முருகனின் தந்தையின் இறுதிக் கிரியை நாளை 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முருகனின் தந்தை வெற்றிவேல் புற்றுநோய் காரணமாக பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல் நிலை மோசமடைந்ததையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சிறையிலுள்ள முருகன் தந்தையுடன் பேச முடியாத நிலையிலேயே தந்தை இன்று காலை மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.