(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில்  ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் மற்றும் பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரின், நடவடிக்கைகளுக்காக கொழும்பின் பல முன்னணி பாடசாலைகள் கையேற்கப்பட்டுள்ளன.

 விடுமுறைகளுக்கு சென்று திரும்பும் , விடுமுறைகளில் செல்ல உள்ள இராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் தங்குவதற்கும்  மேலதிக படையினரின் நடவடிக்கைகளுக்காக எனக் கூறியே இப்பாடசாலைகள், கல்வி அமைச்சிடம் கோரப்பட்டிருந்ததாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

கொழும்பு, ரோயல் கல்லூரி, தேர்ஸ்டன் கல்லூரி, டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி, மஹனாம கல்லூரி, பத்தரமுல்ல சுபூத்தி வித்தியாலயம், கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயம்  உள்ளிட்ட பிரதான பாடசாலைகளே இவ்வாறு பாதுகாப்புத் தரப்பினரின் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாடசாலைகள் கோரப்பட்டால், அவற்றை வழங்குமாறு, அதிபர்களுக்கு கல்வி அமைச்சு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.

 இது குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ராநந்தவிடம் கேட்ட போது,

'முதலில் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்காக 13 பாடசாலைகள் கோரப்பட்டிருந்தன.  கொழும்பு ரோயல் கல்லூரி, டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, தேர்ஸ்டன் கல்லூரி ஆகியன இராணுவத்தின் நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.