(ஆர்.ராம்)

கொரோனாவின் கோரமுகம் ஒருபக்கமிருக்க, மறுபக்கத்தில் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை, நீதித்துறை ஆகியவற்றுக்கிடையே மீண்டும் முட்டிமோதல்கள் ஏற்படுவதற்கான சூழமைவுகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. இதனால் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் மீண்டும் அரசியலமைப்பு நெருக்கடியொன்று ஏற்படுவதை தவிர்த்துச் செல்ல முடியாதநிலை உருவெடுத்திருக்கின்றமை தெளிவாக தெரிகின்றது.

ஆம், எட்டாவது பாராளுமன்றம் மார்ச் 2ஆம் திகதி கலைக்கப்பட்டு 19ஆம் திகதி வேட்புமனுத்தாக்கல் நிறைவுக் கொண்டுவரப்பட்டது. அத்துடன் அன்றையதினமே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என்று அறிவித்ததோடு புதிய திகதியை ஏப்ரல் 20ஆம் திகதி அறிவிப்பதாகவும் கூறியிருந்தார். 

இதற்கு அடுத்தபடியாக,தேர்தலை நடத்தக்கூடிய சூழல் காணப்படவில்லை என்பதை குறிப்பிட்டு நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் பெறுமாறு ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் கடிதமொன்றை அனுப்பியிருந்தார். எனினும் அந்தக் கடிதத்திற்கு தனது செயலாளர் பீ.பி.ஜயசுந்தர மூலமாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பாதிலளித்தார். 

அப்பதிலில், 'வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள் தேர்தலை நடத்தவதற்கு தனது முழுமையான விருப்பினை ஜனாதிபதி தெரிவித்ததோடு மீண்டும் பழைய பாராளுமன்றத்தினை கூட்டமாட்டேன் என்றும், உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கேட்கப்போவதில்லை' என்றும் திட்வட்டமாக கூறினார். 

அத்துடன் 'தேர்தல் குறித்த தீர்மானத்தினை எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவின் தற்துணிவில் இருப்பதாகவும் ஆணைக்குழுவின் சுயாதீன தீர்மானங்களில் கட்டுப்பாடுகளையோ தலையீடுகளையோ மேற்கொள்ளப்போவதில்லை என்றும்' அப்பதிலில் மேலும் கூறியிருந்தார். 

இவ்வாறிருக்க, கடந்த 20ஆம் திகதி கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் பிரசார நடவடிக்கைகளுக்காக  5முதல் 7வாரங்கள் வரையிலான காலப்பகுதியை மையப்படுத்தி ஜுன் 20ஆம் திகதி தேர்தல் திகதி அறிவித்தது. 

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து 90நாட்களுக்குள் தோர்தல் நடத்தப்பட்டு புதிய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அவ்வாறு கூட்டப்படுவதாயின் ஜுன் 2ஆம் திகதி ஒன்பதாவது பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். ஆனால் தேர்தலே ஜுன் 20இல் தான் நடைபெறவுள்ளதால் அத்தகைய செயற்பாடு அரசியலமைப்பு மீறலாகவே இருக்கப்போகின்றது. 

இதனைவிடவும் ஏப்ரல் 30ஆம் திகதியுடன் நிறைவேற்றப்பட்ட கணக்கறிக்கையின் காலம் முடிவுக்கு வருவதால் ஆட்சியாளர்கள் புதிய பாராளுமன்றம் கூட்டப்படும் வரையில் நிதியைக் கையள்வதற்கான அதிகாரம் தொடர்பிலும் கேள்வி எழுந்துள்ளது. 

இவ்வாறான சூழலில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தினை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் அனைத்து கோருவதுடன் செப்டம்பர் 2ஆம் திகதி வரையில் அதற்கான ஆயுட்காலம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றன. 

ஆனால் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்டி இல்லாத பிரச்சினையை மீண்டும் ஏற்படுத்த விரும்பவில்லை என்றும் நாட்டை நிருவகிப்பதற்கான நிதி கையாளுகை அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு உள்ளதாகவும் ஆளும் தரப்பினர் கூறுகின்றனர்.

இவ்வாறானதொரு சூழலில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜுன் 20ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்பது கேள்வியாக இருக்கின்றது. ஜுன் 2ஆம் திகதி கூட்டப்பட வேண்டிய பாராளுமன்றத்திற்கு 18நாட்கள் காலம் தாழ்த்தியே தேர்தல் நடக்கின்றது. பழைய பாராளுமன்றத்தினை கூட்டவே மாட்டேன் என்பதில் விடாப்பிடியாக நிற்கின்றார் ஜனாதிபதி கோத்தாபய. 

எதிர்க்கட்சிகளும் விட்டுக்கொடுப்பதாய் இல்லை. உயர்நீதிமன்றத்திற்கு செல்வதற்கான ஆயத்தங்களை மெதுவாக முன்னெடுப்பாக தகவல்களும் உள்ளன. இத்தகைய நிலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன மற்றும் அலிசப்ரி ஆகியோர் அடுத்து வரும் நாட்களில் ஏற்படப்போகும் நெருக்கடிகள் அவற்றுக்கான மாற்றுவழிகள் குறித்த கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அவை தனித்தனியே வருமாறு, 

கலைக்கப்பட்ட பாராளுமன்றை கூட்டுவதே ஒரேவழி: கலாநிதி ஜயம்பதி

அரசியல் நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு கலைக்கப்பட்ட பாராளுமன்றை கூட்டுவதே ஒரேவழியென்று ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன குறிப்பிடுகின்றார். 

அத்துடன், நாட்டின் அரசாங்கம் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை, நீதித்துறை ஆகிய மூன்று தூண்களையும் மையப்படுத்தியே நகர்கின்றது. இதில் ஒருதுறையை முடக்கி விட்டு அரசாங்கத்தினை முன்னகர்த்திச் செல்ல முடியாது. சட்டவாக்கத்துறையானது மிகவும் முக்கியத்தவம் வாய்ந்தது. அத்துறைக்கே நிறைவேற்றுதுறையினர் பொறுப்புக்கூற வேண்டிய தேவையும் உள்ளது. 

ஆகவே பாராளுமன்றம் இல்லாத நிலையில் நிறைவேற்றுத்துறையினர் பொறுப்புக்கூற வேண்டிய அவசியமற்று ஏதேச்சதிகாரமாக செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள். இதன் காரணத்தினால் தான்  மூன்று மாதத்திற்கு அதிகமாக சட்டவாக்கத்துறையை செயலற்றதாக்குவதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்படவில்லை. 

இதனைவிடவும் கொரோனா தொற்று பரவலால் சட்டமா அதிபர் திணைக்களம் முதல் புதுக்கடை நீதிமன்ற வளாகமே முடக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் சட்டவாக்கத்துறையும், நீதித்துறையும் செயலற்றுப்போயிருக்கின்றன. இவ்வாறான நிலைமையை தொடர்ச்சியாக பேணிக் கொண்டு நிறைவேற்றுத்துறை ஆட்சியதிகாரத்தினை முன்னெடுத்தச் செல்வதானது சர்வாதிகாரமாகும். மேலும் நீதித்துறை இயங்கினாலும் அதற்கும் வரையறைகள் காணப்படுவதால் சட்டவாக்கத்துறையின்றி நீண்டகாலம் செல்வது ஜனநாயக மறுதலிப்பாகும்.

பாராளுமன்றை மீண்டும் கூட்டவேண்டியதன் அவசியம்

1948ஆம் ஆண்டிற்கு பின்னர் தற்போதே அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2018 ஒக்டோபரில் நடைபெற்றது அரசியலமைப்பு நெருக்கடி அல்ல. அப்போதைய ஜனாதிபதியால் திட்டமிட்ட வகையில் அரசியலமைப்பு மீறப்பட்டது. ஆகவே இதற்குள்ள ஒரே தீர்வு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தினை கூட்டுவதாகும். 

ஜனாதிபதிக்கு அவசர நிலைமைகளின் கீழ் பாராளுமன்றத்தினை கூட்டுவதற்கு முழுமையான அதிகாரமும் உள்ளது. ஆகவே அவருடைய தீர்மானத்தில் பாராளுமன்றத்தினை கூட்டுவதில் எவ்விதமான பிரச்சினையும் கிடையாது. 

கொரோனா ஒழிப்புச் செயற்பாட்டிற்கான நிதியத்திற்கு கோடிக்கணக்கான பணம் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த நிதி கையாளுகை தொடர்பில் பாராளுமன்றத்திற்கு தெரியப்படுத்தப்படுத்தப்படுவதோடு அதற்கான அனுமதியும் பெறவேண்டும். நிதி கையாளுகை தொடர்பான முழுமையான அதிகாரமும் சட்டவாக்கத்துறைக்கே உள்ளது. 

மேலும் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு பின்னரான காலத்தில் அரசாங்க நிதி ஒதுக்கீடுகளை செய்வதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெறவேண்டியது அவசியமாகின்றது. நிதி ஒதுக்கீடுகளின்றி பாராளுமன்று கலைக்கப்பட்டால் அரசியலமைப்பில் 150ஆவது சரத்தின் 3ஆவது பிரிவின் கீழாக பொதுநிருவாக சேவைத்துறைக்கு மட்டுமே ஜனாதிபதியால் நிதியைப் பயன்படுத்தமுடியும். அதற்கு அப்பால் அவரால் செல்ல முடியாது. 

மாற்றுவழி

ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்று பழைய பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்டமுடியும். அத்துடன் அப்பாராளுமன்றத்திற்கான ஆயுட்காலம் செப்டம்பர் 2ஆம் திகதி வரையில் காணப்படுகின்றது. அவ்வாறான தீர்மானத்திற்குச் சென்றால் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. 

ஆனால் மீண்டும் பாராளுமன்றத்தினை கூட்டுவதால் தாக்கல்செய்யப்பட்ட வேட்பு மனு வறிதாகிவிடும் இதனால் எதிரணிகள் ஒன்றுபட்டு விடலாம் என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்கு காணப்படுகின்றது.

அவ்வாறன அச்சத்தினை போக்கப்படவேண்டுமாயின், விசேட நிலைமைகளின் பிரகாரம் தேர்தல் பிற்போடப்படுவதால் அளிக்கப்பட்ட வேட்புமனுக்களை பிறிதொரு தினத்தில் தேர்தல் நடத்தப்படும் போது அவற்றையே செல்லுபடியாக கொள்ள வேண்டும் என்ற வகையில் வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தமொன்றை மேற்கொள்ள முடியும். அதற்கான வரைவினை தயாரித்து அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலைப் பெற்று நிறைவேற்ற முடியும். 

இந்த விசேட ஏற்பாட்டுக்கான வியாக்கியானம் உயர்நீதிமன்றத்திடம் செல்கின்றபோது நாட்டின் நிலைமைகளை உணர்ந்து சர்வஜன வாக்கெடுப்பினை மேற்கொள்ளுமாறு உயர் நீதிமன்று வலியுறுத்தாது என்று கருதுகின்றேன் என்றார்.

கலைத்த பாராளுமன்றுக்கு உயிர்கொடுப்பதால் பயனில்லை; ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி

கலைத்தபாராளுமன்றத்திற்கு உயிர்கொடுப்பதால் எந்தவிதமான நன்மையும் ஏற்படப்போவதில்லை. நெருக்கடியான நிலைமைகளில் குறுகிய கால தாமதத்தில் தேர்தலை நடத்துவதற்கான நியாயப்பட்டை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். 

அத்துடன், 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றபோது 40ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்படுகின்ற நிலைமைகளை எதிர்வு கூறி சட்டங்களை உள்ளீர்த்திருக்கவில்லை. ஆகவே காலத்திற்கு காலம் ஏற்படுகின்ற நிலைமைகளை அடிப்படையாக வைத்து சட்டங்கள் நெகிழ்வுத்தன்மையுடன் பயன்படுத்தப்படுகின்றன. புதிய ஏற்பாடுகளும் இயற்றப்படுகின்றன. 

அவ்வாறிருக்க அரசியலமைப்பின் தற்போதைய ஏற்பாடுகளின் பிரகாரம் நான்கரை வருடங்கள் நிறைவடைகின்றபோது பாராளுமன்றத்தினை ஜனாதிபதியால் கலைக்க முடியும். ஐந்து வருடங்களாகின்றபோது இயல்பாகவே அதன் ஆயுட்காலம் வறிதாகும். இவ்வாறான நிலையில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்டுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டும் தான் உள்ளது. 

அவசரக் கோட்பாட்டின் பிரகாரம் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தினைக் கூட்டமுடியும். ஆனால் தற்போதைய சூழலில் அவ்வாறான அவசர சூழல் காணப்படவில்லை. ஆகவே அந்த கோட்பாட்டை பயன்படுத்தி பாராளுமன்றத்தினை கூட்ட வேண்டிய அவசியமில்லை. 

ஏனென்றால் போர் போன்றதொரு இக்கட்டான சூழல் நாட்டில் ஏற்படவில்லை. தொற்றுநோய் பரவலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திடீரென்று ஏற்பட்ட அந்த நிலைமையால் சற்று தாமதம் நிலவுகின்றது.

இதனைவிடவும், சில மனுக்களை 14நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு கூறுவார்கள். ஆனால் 14ஆவது நாள் விடுமுறையாக அமைந்தால் அதற்கு அடுத்த நாட்களில் மனுத் தாக்கல் செய்யப்படும்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றதல்லவா? அதுபோன்று தான் புதிய பாராளுமன்றத்தினையும் கூட்டுவதற்கு ஏதுவான மிக நெருங்கிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரசியலமைப்பு மீறல் அல்ல

ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் பாராளுமன்றத்தினை கலைத்தபின்னர் உரிய அறிவிப்புக்களைச் செய்துள்ளார். குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக அவற்றை முறையாக எடுக்கப்படவில்லை. அவ்வாறான நிலையில் தான் மூன்று மாதகாலத்திற்கு அப்பால் சென்று தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

அது ஜனாதிபதியினுடைய தவறு அல்ல. தேர்தல்கள் ஆணைக்குழுவே திகதியை நிர்ணயித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டள்ள அசாதாரண நிலைமையே அதற்கு காரணமாகும். ஆகவே தேர்தல் திகதி தாமதமாகியமைக்கான பழியை ஜனாதிபதி மீது சுமத்த முடியாது. ஜனாதிபதி திட்டமிட்ட வகையில் தேர்தல் திகதியை நீடிக்கவுமில்லை. பாராளுமன்றத் தேர்தலை நடத்தாது காலங்கடத்தவுமில்லை என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். எதிர்பாராதவிதமாகவே அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

நிதி கையாளுகை

பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அமைச்சரவை அவ்வாறே இருக்கின்றது. ஆகவே நிதி அமைச்சருக்கான அதிகாரிகள் செல்லுபடியானதாகவே உள்ளது. மேலும் நிறைவேற்றப்பட்ட கணக்கறிகைக்கான காலம் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை பின்பற்றிய நிதி ஒதுக்கீடுகளை செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இருக்கின்றன. 

அரசியலமைப்பின் 151முதல் 153ஆவது சரத்துக்கள் வரையில் நிதி கையாளுகை தொடர்பான ஏற்பாடுகளை தெளிவாக குறிப்பிட்டுள்ளன. ஆகவே நிதி அமைச்சருக்கோ, ஜனாதிபதிக்கோ நிதியை பயன்படுத்துவதற்கு அதிகாரங்கள் உள்ளன. அவர்கள் நிதியை பயன்படுத்திய பின்னர் புதிய பாராளுமன்றத்தில் அதற்கான அறிக்கையை சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் காணப்படுகின்றன. 

உயர்நீதிமன்றை நாடலாம்

மேலும் தேர்தல் திகதி தாமதமாகியமைக்காகவோ அல்லது பழைய பாராளுமன்றத்தினை மீளக் கூட்டுவதற்காகவோ யார் வேண்டுமானாலும் நீதிமன்றை நாடமுடியும். நீதிமன்றம் யதார்த்த நிலையை அறியும் என்றார்.