- லியோ நிரோஷ தர்ஷன்

கொவிட் - 19 வைரஸ் தொற்று உலக நாடுகளை ஆக்கிரமித்து மனித உயிர்களை மாத்திரமல்லாது அனைத்துலக செயற்பாடுகளையும் அழித்து விட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் இவ்வாறானதொரு பேரழிவை எந்தவொரு உலக நாடும் எதிர்ப்பாத்திருக்காது.

எவ்வாறாயினும் இந்த வைரஸ் தொற்று விவகாரம் பூகோள அல்லது அனைத்துல அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் அந்த மாற்றங்கள் பலமிக்க நாடுகளுக்கிடையில் எதிர்மறையான போட்டி தன்மையை ஏற்படுத்தியுள்ளது. தெற்காசியாவை பொறுத்த வரையில் பல்வேறு சவால்மிக்கதொரு எதிர்காலம் காத்திருப்பதாகவே அறிவுறுத்தப்படுகின்றது.

வைரஸ் தொற்றிலிருந்து மீள்வதை விட அது ஏற்படுத்தியுள்ள அழிவுகளிலிருந்து மீண்டு வருவதே அனைத்துலகிற்கும் உள்ள புதிய சவாலாகியுள்ளது. அந்த வகையில்  அமெரிக்கா உட்பட  பல நாடுகள்  பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன .அமெரிக்காவில் மாத்திரம்  கொவிட் - 19 தொற்றினால்  சுமார் 8 இலட்சத்து 86 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 50 ஆயிரத்து 246 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

இந்த பெரும் நெருக்கடியானது அமெரிக்காவை ஆட்டி வைத்துள்ளது. இவ்வாறானதொரு நெருக்கடி மிக்க நிலைமையில் கொவிட்- 19 வைரஸ் தொற்று சிகிச்சைக்கு தேவையான சுகாதார மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்வதிலேயும் அமெரிக்க சவால்களை எதிர் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

எந்தவொரு நாடுமே தமது உற்பத்திகளை முடக்கி விட்டுள்ளன. ஆக சீனா மாத்திரமே சுகாதார மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்தும் அதனை சுமார் 100 அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. ஆனால் நெருக்கடியை எதிர்க்கொள்ள தேவையான மருத்துவ பொருட்களை சீனாவிடமிருந்து அமெரிக்க கொள்வனவு செய்வதில் விலகியுள்ளது .

மாறாக உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சில நட்பு நாடுகளின் உதவிகளை மாத்திரமே அமெரிக்கா தற்போது பெற்றுக் கொண்டு வருகின்றது. அந்தவொரு  நிலைமையில்   தான் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் இந்தியாவிடம்  சற்று உரத்த குரலில் மருந்துகளை கோரியிருந்தார். 

சீனாவுடன் கடும் முறுகல் போக்கில் அமெரிக்க செயற்படுகளை மறுப்புறமாக இந்தியா போன்ற நட்பு நாடுகளுடான தொடர்புகளை வேறு கோணத்திலிருந்து கையாள அமெரிக்கா தற்போது ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இந்து மா சமுத்திரத்தின் வலய நாடுகளுடன் சில முயற்சிகளை அமெரிக்க முன்னெடுக்க ஆரம்பித்து விட்டது. தற்போது ஏற்பட்டுள்ள கொவிட்-19 வைரஸ் தொற்று மற்றும் இதன் பின்னரான காலப்பகுதியில் இழப்புகளை ஈடு செய்து மீண்டும் வலுவாக செயற்படுவதற்கான முயற்சிகளாகவே அந்த முன்னெடுப்புகள் அமைந்துள்ளன. 

இதனை மேலும்உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க இராஜாங்க செயலர் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் முன்னெடுக்கப்பட்ட இரு உரையாடல்களை குறிப்பிடலாம். அதாவது இந்தியா மீதான நம்பிக்கை மேலும் வலுவடைந்திருப்பது போன்றே உரையாடல்கள் அமைந்துள்ளன. 

ஏப்ரல் 23 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்க செயலர் மைக்கேல் ஆர்.பொம்பியோ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கிடையிலான தொலை பேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது .

கொவிட் -19 ஐ கட்டுப்படுத்துவதற்கும் தணிப்பதற்கும் இருதரப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் இரு தரப்பு ஒத்துழைப்புகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.   

மேலும்  கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியும் இதே போன்றதொரு கலந்துரையாடல் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் அமெரிக்க இராஜங்க செயலருக்குமியில் இடம்பெற்றது. கொவிட் -19 க்கு பதிலளிப்பதற்கான முயற்சிகளின் ஒருங்கிணைப்பு  மற்றும் உலகளாவிய மருந்து மற்றும் சுகாதார உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவது  குறித்து சில  முக்கிய விடயங்கள் பகிரப்பட்டன.

மேலும் சர்வதேச நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு அமெரிக்கா - இந்தியா மற்றும் பிற நெருங்கிய கூட்டாளர்கள் மற்றும் நட்பு நாடுகளுக்கிடையில் தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை  இதன் போது அமெரிக்க செயலர் எடுத்துரைத்தார். இந்தோ-பசிபிக் மற்றும் உலகெங்கிலும் அமைதி,  செழிப்பு மற்றும் பாதுகாப்பை முன்னேற்றுவதற்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அமெரிக்காவின் உறுதியான உறுதிப்பாட்டையும் இதன் போது நினைவுக் கூறப்பட்டது. 

இந்து மா சமுத்திரத்தின் கட்டுப்பாடுகள் , பிராந்திய அரசியல் மற்றும் கடல்சார் இராஜதந்திர  செயற்பாடுகளில் இந்திய - அமெரிக்க நெருக்கமானது ஆழமிக்கது. தற்போதைய வைரஸ் நெருக்கடி சூழலில்  முன்பிருந்ததை விட அமெரிக்காவின் நம்பிக்கைகுறிய நடாக இந்தியா மாறியுள்ளது.  இதே நிலை ஏனைய உலக நாடுகள் மத்தியிலும் இந்தியா குறித்து  எழ ஆரம்பிக்கும் . 

ஏனெனில் தற்போதைய நிலைமையில்  கொவிட்-19 குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்  குறித்து பதிலளிப்பதில் சீனா பின்னடைவையே சந்தித்துள்ளது.  வழங்கும் தகவல்ளின் நம்பக தன்மை குறித்து கடும்  கேள்விக்குறியாகியுள்ளது.

உதாரணமாக உயிரிழப்புகள் குறித்து ஆரம்பத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையை பின்னர் மாற்றி கூறியமை ,  சர்வதேச ஊடகங்களுக்கான அனுமதிகளை மறுத்தமை உள்ளிட்ட பல நடவடிக்கைள் சீனா குறித்து அனைத்துலக நாடுகளும் சந்தேக கண்கொண்டு பார்க்க காரணமாகியது. கொவிட்-19 வைரஸ் குறித்து ஏதோவொரு மர்மத்தை சீனா மறைப்பதாகவே வெளிவுலகம் கண்டது. அந்த பார்வை சரி செய்ய சீனா தவறியது மாத்திரமன்றி மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளையே எடுத்து வருகின்றது. 

தெற்காசியாவிற்கு தன்னை  பெரும் வல்லரசாக காண்பிக்க முற்பட்ட சீனாவினால் தற்போது உலக நாடுகளுக்கு நம்பகமான பிம்பத்தை வெளிப்படுத்த முடியாதுள்ளது. பெரும் தொகையான மருத்துவ பொருட்களை பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு சீனா தற்போதைய நெருக்கடியான நிலைமையில் வழங்கினாலும் அந்நாடு குறித்த ஒரு சந்தேக பார்வை ஏனைய உலக நாடுகளுக்கு இருக்கவே செய்கிறது.

இவ்வாறானதொரு நிலையில் இந்தியா அணுகுமுறையானது சுய கௌரவ பாதுகாப்பை மையப்படுத்தி உள்ளதாகவே அமைகிறது. குறிப்பாக உலக நாடுகளுக்கு தனது நம்பக மற்றும் வெளிப்படைத்தன்மையை உணர்த்துவதாகவே இந்தியாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன . 

இலங்கை , பங்ளதேஷ் , மாலைத்தீவு மற்றும் நேபாளம்  போன்ற நாடுகளில் இந்தியாவின் தலையீடுகள் அந்த நாடுகளுக்கு குறுகிய கால தொல்லையாக காணப்பட்டாலும் சீனாவின் வலையில் சிக்கிக்கொண்டுள்ள அளவிற்கு பாரதூரமானதல்ல. என்பதை உணர்த்தும் வகையிலான சூழலே ஏற்பட்டுள்ளது. அதற்காக சக நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதை சரி என அனுமதிக்க முடியாது . 

சீன பொருளாதாரத்தை பொறுத்த வரை 99 வீதம் அரச உடமையானது . மீதியிருக்கும் ஒரு வீதமும் சீன கமினிசவாதத்துடையது. குறிப்பாக சைனா போர்ட் ஹாபர் கம்பனியும் அந்நாட்டின் அரச சார் நிறுவனமாகும். தனி கட்சி ஆளுமையிலான பொருளாதார செயற்பாடுகளே சீனாவில் உள்ளது. 

கொவிட்-19 வைரஸ் தொற்று ஹுவானில் பரவ தொடங்குகையில்  அதனை கட்டுப்படுத்தி ஏனைய நாடுகளை எச்சரிக்க தவறிய நிலையில் பல இரகசியங்களை மூடி மறைக்க சீனா செயற்பட்ட விதம்  ஏனைய நாடுகளை கடுமையாக சந்தேகம் கொள்ள வைத்தது. பல சீன சார்பான நாடுகளை கூட அந்நாடு மீது சந்தேகம் கொள்ள வைத்ததென்றே சொல்ல முடியும். 

எனவே தற்போதுள்ள வைரஸ் தொற்று நெருக்கடி முடிவிற்கு வந்த பின்னர் சீனா குறித்து உலக நாடுகளின் பார்வையும் அணுகு முறையும் எந்தளவு மாற்றமடைகிறதோ , அதை விட பன்மடங்கிலான சாதகமான மாற்றங்களை இந்தியா மீது ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.