(ஆர்.ராம்)

இலங்கைத் தேர்தல்  சட்டத்திற்கு அமைவாகவே நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள நிலையில் திட்டமிட்ட திகதி மாற்றம், ஒத்திவைப்பு என்று எமது அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட விடயங்களை செயற்படுத்துமாறு அழுத்தங்களை வழங்க வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பிர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய சூழலில் பாராளுமன்ற தேர்தலை  நடத்துவதற்கு மிகக் கிட்டியதொரு தினமாகவே ஜூன் 20ஆம் திகதி அறிவிக்கப்பட்டள்ளதாகவும் அவசர நிலைமைகள் தோற்றம் பெற்றால் மட்டுமே அத்திகதி மாற்றப்படும் என்றும் மே 2ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் விசேட மாற்றங்கள் எவையும் ஏற்படுவதற்கான சத்தியங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான நடவடிக்கைகள் குறித்து வீரகேசரிக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும் என்பதே நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் காணப்படுகின்றது.

அதற்கமைவாக நாங்கள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து நடவடிக்கைகளை எடுத்திருந்தபோதும் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளால் உரிய காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்த முடியாது போயுள்ளது.

இவ்வாறான நிலையில் தான் எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திகதியில் தேர்தலை நடத்தக்கூடாது என்று எமக்கு அழுத்தங்கள் அளிக்கப்படுகின்றன. மேலும் மூன்று மாதங்கள் கடந்த நிலையில் தேர்தல் நடத்தப்படுவது பற்றி பல்வேறு கருத்துக்களை கூறுகின்றார்கள்.

பழைய பாராளுமன்றத்தினைக் கூட்டுமாறும் சில தரப்பினர் வலியுறுத்துகின்றார்கள். மறுபக்கத்தில் எம்மை சுயாதீன ஆணைக்குழுவாக அறிவித்தபோதும் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களை மறைமுகமாக பிரயோகிக்கின்றார்கள்.

ஆகவே இத்தகை  பின்னணிகளில் தான் நாம் தேர்தல் திகதியை அறிவித்திருக்கின்றோம். நாட்டில் காணப்படும் 1981ஆம் ஆண்டு முதலாம் இலக்க தேர்தல்கள் திருத்தச்சட்டத்திற்கு அமைவாகவே நாம் அறிவிப்புக்களைச் செய்துள்ளோம். அதாவது, தேர்தல் நடத்துவதற்கு முன்னதாக ஐந்து முதல் ஏழுவாரங்கள் வரையில் பிரசாரப் பணிகள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றுக்கான காலவேளையை வழங்கும் வகையில் அத்திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழவிற்கு வெவ்வேறு வகையான அழுத்தங்களை அளிப்பதால் எவ்விதமான பயனுமில்லை. தற்போது அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படும் என்றும் கூறுகின்றார்கள். இவ்வாறான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வினை வழங்கும் அதிகாரம் ஆணைக்குழுவிடத்தில் இல்லை. ஆகவே அதிகாரங்கள் இல்லாத ஆணைக்குழவிற்கு அழுத்தங்களை அளிப்பதால் பயனில்லை.

பாராளுமன்றத்தினை மீளக் கூட்டுவதற்கோ அல்லது பாராளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடத்தவதற்கான காலத்தினை அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்தத்தினை மேற்கொள்ளுதல் உட்பட இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் சகல அதிகாரங்களையும் ஜனாதிபதியே கொண்டிருக்கின்றார்.

ஆகவே தீர்வினை வழங்க கூடியவரை நாடுவதை விடுத்து தீர்வினை வழங்க முடியாத வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை கொண்ட ஆணைக்குழுவிற்கு அழுத்தங்களை பிரயோகிப்பதால் எதுவும் நடைபெறப்போவதில்லை.

மேலும் மே இரண்டாம் திகதி நடைபெறும் கூட்டத்தில் பெரும்பாலும் தேர்தல் திகதி உள்ளிட்ட எந்தவிடயங்களிலும் மாற்றங்களை மேற்கொள்ளப்படுவதற்கு குறைந்தளவான சாத்தியங்களே காணப்படுவதாகவும் ஒருவேளை நிலைமைகள் மோசமடைந்தால் தேர்தல் திகதிக்கு சொற்பகாலம் முன்னதாக மாற்றுவழிமுறை குறித்த அறிவிப்புக்களை ஆணைக்குழு அறிவிக்கும் என்றார்.