(எம்.எப்.எம்.பஸீர்)

மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம்  மாவட்டங்கள் ஆகியவற்றில்  அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நிலை, எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏனைய சகல மாவட்டங்களிலும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது, ஏப்ரல் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும்  அன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. அதன் பின்னர் குறித்த 21 மாவட்டங்களிலிலும், மே மாதம் முதலாம் திகதி வௌ்ளிக்கிழமை வரை ஊரடங்கு சட்டம் இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை மட்டும் 9 மணி நேரம் அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தாலும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் மே நான்காம் திகதி முதல் பணிகளை தொடரும் வகையில் சட்டதிட்டங்கள் தளர்த்தப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றது. முற்பகல் 10 மணிக்கு தனியார் நிறுவனங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 4 ஆம் திகதியின் பின்னர் நிறுவனங்களை நடாத்திச்செல்லும் விதம் குறித்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள், அடுத்த வாரத்திற்குள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி செயலகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கும் தனியார் பிரிவின் தொழிற்சாலைகள், கட்டட நிர்மாண வர்த்தகங்கள், சேவை வழங்கும் நிறுவனங்கள், மரக்கறி, மீன் மற்றும் சில்லறை வியாபாரங்களை நடத்திச்செல்வதற்கு அனுமதி இதன்போது வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த நிறுவனங்களின் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மாத்திரமே சேவைக்கு உள்வாங்கப்பட வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து அத்தயாவசிய தேவைகள் மற்றும் தொழில் நிமித்தமான போக்குவரத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிரதான வீதிகளில், அத்தயாவசிய தேவைகள் இன்றி மக்கள்  நடமாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.  ஊரடங்கு நீக்கப்பட்டாலும் கொரோனா பரவலுக்கான அச்சுருத்தல் ஏதேனும் ஒரு பகுதியில் காணப்பட்டால் அந்த பகுதி உடனடியாக ஊரடங்கு நிலைமையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

மேலும், ஊரடங்கு நிலை அமுலில் இருக்கும் போது, அத்தியாவசிய சேவைகளுக்காக இருப்பினும் வீட்டிலிருந்து வெளியே செல்ல, ஒவ்வொருவரினதும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை மையப்படுத்தி அனுமதியளிக்கும் புதிய முறைமை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  அதன்படி ஒவ்வொரு திங்கட் கிழமைகளிலும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதி இலக்கம் 1 அல்லது 2 இல் முடியும் நபர்களுக்கு மட்டும்  அத்தயாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதியளிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் 3,4 என்பவற்றில் முடிவடையும் நபர்கள் செவ்வாயன்றும், 5,6 இல் முடிவடைவோர் புதனன்றும், 7,8 இல் முடிவடைவோர் வியாழனன்றும், 9, 0 இல் முடிவடைவோர் வெள்ளியன்றும் அத்தயாவசிய தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர்.

 அத்தயாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்யவே அவ்வாறு அவர்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவுள்ளதுடன், அவர்கள் வீட்டிலிருந்து நடந்து சென்று கொள்வனவு செய்யத்தக்க தூரத்தில் உள்ள விற்பனை நிலையங்களையே இதன்போது தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் நிபந்தை விதிக்கப்ப்ட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த,  வீட்டிலிருந்து பாதைகளுக்கு பொது மக்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என  ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து அத்தியாவசிய தேவைகள் மற்றும் தொழில் நிமித்தமான போக்குவரத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிரதான வீதிகளில், அத்தயாவசிய தேவைகள் இன்றி மக்கள்  நடமாடுவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 அத்துடன் அனைத்து வகையான விழாக்கள், சுற்றுப்பயணங்கள், யாத்திரைகள், களியாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள், சமய விழாக்கள் போன்றவை மறுஅறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளன.