(நா.தனுஜா)

நாட்டில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் பாராளுமன்றத்தின் பாதுகாப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அளவிற்கு ஏதேனும் தீவிரவாத அச்சுறுத்தல் நிலை ஏற்பட்டிருக்கிறதா எனக் கேள்வியெழுப்பி முன்னாள் அமைச்சரகளான எரான் விக்ரமரத்ன மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் பாராளுமன்றம் பொதுச்செயலாளருக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

பாராளுமன்றப் பொதுச்செயலாளருக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த வியாழக்கிழமை இரவு முதல் பாராளுமன்றக் கட்டடத்தொகுதிக்கான பாதுகாப்பு பிரச்சினை எழுந்துள்ள நிலையில், அதுபற்றி உங்களுடன்  கலந்துரையாடுவதற்கு நேற்று  நானும், ஹர்ஷ டி சில்வாவும் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தோம். எனினும் அன்றைய தினம் நீங்கள் வருகை தந்திருக்காத காரணத்தினால் பாராளுமன்ற பாதுகாப்புப் பிரிவின் பிரதி சார்ஜன்ட் குஷான் ஜயரத்னவைச்  சந்தித்தோம்.

வழமையாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக அதிக எண்ணிக்கையிலான இராணுவத்தினரும் அங்கிருந்தனர். பாராளுமன்றத்திற்கான பாதுகாப்பு வழமைபோன்று வழங்கப்பட வேண்டுமென நீங்கள் குறிப்பிட்டதாக ஜயரத்ன தெரிவித்தார்.

அவ்வாறிருக்கையில் நாடு முழுவதுமாக முடக்கப்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்றத்திற்கான பாதுகாப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியமென்ன? அத்தகைய அச்சுறுத்தல் நிலைமை என்னவென்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றோம்.

ஏதேனும் தீவிரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் உள்ளதா? எனினும் பாதுகாப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியளவிற்கு அச்சுறுத்தல்கள் ஏதேனும் இருப்பதாக எமக்குத் தகவல் கிடைக்கவில்லை.