இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்துவீச்சு ஜோடியாக திகழும்  ஜேம்ஸ் அண்டர்சன், ஸ்டுவர்ட் பிரோட் ஆகிய இருவரும் தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னான் தலைவரான கிரேம் ஸ்மித்துக்கு பந்துவீச அஞ்சியதாக தெரிவித்துள்ளனர்.

இவ்விருவரினதும் பந்து வீச்சை இங்கிலாந்து மண்ணில் எந்தவொரு துடுப்பாட்ட வீரர்களாலும்  எதிர்கொள்வது மிகவும் கடினமானதாக இருக்கும். எனினும், இந்த இருவருக்கும் இடது கை துடுப்பாட்ட வீரரான கிரேம் ஸ்மித் மரண பயத்தை காட்டியுள்ளார்.

கிரேம் ஸ்மித் குறித்து ஸ்டுவர்ட் பிரோட் கூறுகையில் ‘‘கிரேம் ஸ்மித்தான் மிகவும் அபாயகரமான துடுப்பாட்ட வீரர் என்பதை கண்டுபிடித்தேன். ‘எரவுண்ட தி விக்கெட்’ இருந்து அவருக்கு பந்து வீச ஆசைப்பட்டேன். அவரை ‘டிரைவ் ஷொட் ‘ அடிக்க நான் முயற்சி செய்தால், அது மாறுபட்டதாக இருந்திருக்கும். ஆனால் ‘ஓவர் தி விக்கெட்’ இருந்து பந்து வீசியது சரிவரவில்லை. அது நம்பிக்கையற்றதாக போனது’’ என்றார்.

‘‘இதே பிரச்சனை முதன்முறையாக அவருக்கு எதிராக 2003 இல் விளையாடும்போது எனக்கும் இருந்தது. அந்த நேரத்தில் நான் பந்தை ‘அவுட் ஸ்விங்’ மட்டுமே செய்வேன். அதாவது வலது கை  துடுப்பாட்ட வீரர்களுக்கு ‘ஸ்டம்ப்’ பிலிருந்து பந்தை வெளியே கொண்டு செல்வேன். அப்போது இடது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு என்னால் ‘அவுட் ஸ்விங்’ பந்து வீசத் தெரியாது.

நான் அவருடைய வலிமைக்கு தீனியளித்துக் கொண்டிருந்தேன். இது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எனது பந்துகளை ‘லெக்- சைட்’ க்கு எளிதாக விளாசினார். 2003 தொடரில் இரண்டு இரட்டை சதங்களை அடித்தார். அவருக்கு பந்து வீசுவது எளிதான காரியமல்ல’’ என்று ஜேம்ஸ் அண்டர்சன் தெரிவித்தார்.