(நா.தனுஜா)

கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு சார்க் நாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கி பாகிஸ்தான் ஏற்பாடு செய்திருந்த காணொளி மாநாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்காசியக் கூட்டமைப்பின் (சார்க்) அங்கத்துவ நாடுகளின் சுகாதார அமைச்சரகள் கலந்துகொள்ளும் காணொளி மாநாடு கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தானின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்குப் பதிலாக அந்நாட்டு சுகாதார சேவைகள் மற்றும் நெறிப்படுத்தல்களுக்கான சிறப்பு உதவியாளர் வைத்திய நிபுணர் ஸர்பார் மிர்ஸா தலைமை தாங்கியதுடன் சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் மற்றும் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர். இலங்கையின் சார்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கலந்துகொண்டார்.

இக்காணொளி மாநாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மருத்துவப் பணியாளர்களுக்குப் பயிற்சியளித்தல், மருந்துப்பொருட்கள் விநியோகம், தகவல் வழங்கள், ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு, உலக சுகாதார ஸ்தாபனம் போன்ற முன்னரங்கில் செயற்படும் அமைப்புக்களுக்கு விரிவான ஒத்துழைப்பை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.