இலங்கைத் தேர்தலும் காமன் கூத்தும்

25 Apr, 2020 | 10:33 PM
image

தமிழகம் மற்றும் இலங்கையின் மலையகப் பகுதிகளில் காமன் கூத்து பரவலாக அறியப்பட்ட ஒன்று.

சிவனின் தவத்தைக் கலைக்க `காமதேவன்` மன்மதன் மீன்கொடித் தேரில் வந்து கரும்பை வில்லாக்கி காதல் பாணத்தை எய்வதாகவும், அதனால் சினமுற்ற சிவபெருமான் மன்மதனை எரித்துச் சாம்பலாக்கினார் என்று புராணக் கதைகள் கூறுகின்றன.

பின்னர் ரதியின் வேண்டுகோளுக்கிணங்க அவள் கண்ணுக்கு மட்டும் புலப்படும் வகையில் மன்மதனை சிவன் மீண்டும் உயிர்ப்பித்தார் என்பது இந்தக் கூத்தில் சொல்லப்படும்.

கூத்தின் இறுதி நாளன்று நடைபெறும் `எரிந்த கட்சி, எரியாத கட்சி` என்று போட்டிப் பாட்டுக் கச்சேரி நடப்பது இதன் சிறப்பம்சமாகும். இதில் எரிந்த கட்சி என்பது காமனையும், எரித்த கட்சி என்பது சிவனையும் குறிக்கும் என்று கிராமியக் கலைஞர்கள் விளக்குவர்.

இது நாளடைவில் பிரச்சினை, விவாதம் என்று ஏதாவது வந்தால், உடனே மக்கள் எரிந்த கட்சி அல்லது எரியாத கட்சி என்று பிரிந்து நிற்பதற்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது.

இலங்கையில் இப்போது நடக்கும் அரசியல் கூத்தில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டுமா இல்லையா என்பது தொடர்பில், அரசியல் கட்சிகள், `எரிந்த கட்சி மற்றும் எரியாத கட்சியாக` பிரிந்து தாமே சரியென்று `ஒற்றைக் காலில்` நிற்கின்றன..

பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கலைக்கப்பட்ட நாடளுமன்றம் கூட்டப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டிலிருந்து விலகவில்லை. ஆனால் ஆளும் தரப்போ, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அது நிறைவேறாமல், நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய முடியாது என்று கூறுகிறது. 

கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படாவிட்டால் நீதிமன்றம் செல்வோம் என்று எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும் எந்தவொரு எண்ணமும் தனக்கு இல்லை என்று தெளிவாகக் கூறிவிட்டார். ``முடியாததை செய்வதை சட்டம் எதிர்ப்பாக்கவில்லை`` என்று வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி ஜூன் முற்பகுதிக்கு பிறகு நாடளுமன்றத்தை கூட்ட தனக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்படி நோய் அரசியலில் சிக்கியுள்ள இலங்கையில், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி, ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் ஜூன் 20 அன்று நடைபெறுமா என்பதிலும் ஐயங்கள் உள்ளன. கொரோனா நோயில் தாக்கம் குறைந்து வருவதற்கான அறிகுறிகள் இல்லாத நிலையில் ஜூன் 20 ஆம் திகதி தேர்தல் என்று எதன் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது என்பதும் விளக்கப்படவில்லை.

சூழ்நிலைகள் குறித்து மே 4 ஆம் திகதி மீளாய்வு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜூன் 20 ஆம் தேதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பிறந்தநாள்.

நாட்டில் அதிகாரபூர்வமான நெருக்கடி நிலை அறிவிக்கப்படாத நிலையில் `நெருக்கடி` காரணமாகவே தேர்தலை ஒத்திவைக்க முடிவு செய்ததாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா போன்ற எதிராபாக சிக்கல்களை சமாளிக்க இலங்கையில் போதிய சட்டங்கள் இல்லை. உதாரணமாக பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின்படி, `பொது ஒழுங்கை` நிலைநிறுத்த குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே ஜனாதிபதி ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க முடியும். பொது ஒழுங்கு என்பது சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து, வன்முறை மற்றும் சமூக அமைதியின்மையை தடுப்பது என்பதே பொதுவான புரிதல்.

இந்தக் கோட்பாடு, பொது சுகாதாரத்திலிருந்து முற்றும் மாறுபட்டது.. அது நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது மற்றும் இதர சுகாதார ஆபத்துக்களை களைவது தொடர்பானது. 

இலங்கை அரசியல் யாப்பின் 15 ஆவது ஷரத்து இந்த இரண்டுக்குமான வேறுபாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. பொது ஒழுங்கை பொது சுகாதாரத்துடன் ஒப்பிடக் கூடாது என்று அந்த ஷரத்து கூறுகிறது.

வேறு எந்தச் சட்டத்தின் அடிப்படையிலும் நாட்டில் அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க முடியாது.

ஆனால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய சட்டங்களை முன்மொழிந்து, விவாதித்து அதற்கு ஒப்புதல் பெறவும் இப்போது வழியில்லாமல் உள்ளது.

இலங்கை அரசியல் யாப்பின் 19 ஆவது சட்டத் திருத்த்ததின்படி உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு பேரவையின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய, `கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி மற்றொரு நெருக்கடியை உருவாக்க விரும்பவில்லை` என்று கூறிவிட்டார்.

இலங்கையில் மிகவும் மதிக்கப்படும் பொது சுகாதார வைத்தியர்கள் அமைப்பு, கொரோனா நோய் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இயல்பு நிலையை ஏற்படுத்துவது தொடர்பிலான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு முக்கியப் பரிந்துரையாக இப்போதைக்கு, `இதர மதக் கூட்டங்கள், பெரியளவிலான நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள் அல்லது மாநாடுகள் மற்றும் கலாச்சார ஒன்றிணைவுகள் ஆகியவை தொடர்ந்து தடுக்கப்பட வேண்டும்` என்று பரிந்துரைந்துள்ளது                 

எந்த நாட்டின் அரசியல் யாப்பு எழுத்தப்பட்ட போதும், எதிர்காலத்தில் இப்படியான நெருக்கடிகளை எதிர்ப்பார்த்து சட்டங்களை இயற்றுவதில்லை. தேசிய நெருக்கடி ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என்பது தொடர்பில் சில வழிகாட்டல்களை மட்டுமே அளித்துள்ளது.

எதிர்பாராத நெருக்கடிகளை சந்திக்க புதிய சட்டங்கள் தேவை. கோவிட்-19 ஒரு தேசிய நெருக்கடி என்பதில் எவ்வித ஐயப்படும் இல்லை. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மட்டுமே நம்பியிராமல், அரசியல் யாப்பின் 70 ஆவது ஷரத்து பிரிவு 7 இன் கீழ் ஜனாதிபதி நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த முடியும் என்று சில சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே தனித்துவமான வகையில் பொது சுகாதார நெருக்கடிகளை சமாளிக்க புதிய சட்டத்தை இயற்ற வேண்டியத் தேவை அரசுக்கு உள்ளது.

அப்படியான சட்டம் ஒன்றை இயற்ற கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டுவதில் தவறேதும் இருக்க முடியாது. அப்படிக் கூடிய நாடாளுமன்றம் அந்த தூய நோக்கத்திலிருந்து விலகிச் செல்கிறது அல்லது எதிர்ப்பார்த்த விளைவை அளிக்கவில்லை என்றால், கூட்டிய நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ அப்படி செய்வாராயின் அரசியலுக்கு அப்பால் தேசிய நலனுக்கான முயற்சியை எடுத்தார் எனும் நற்பெயருக்கு ஆளாவார். அப்படிச் செய்தால் அது அங்கீகரிக்கப்படவும் வேண்டும்.

கோவிட்-19 நோயால் ஏற்பட்டுள்ள நெருக்கடி மிகப் பெரியது. இப்போதுள்ள சூழலைப் பயன்படுத்தி சொந்த அரசியல் இலாபங்களைப் பெற்றுக் கொள்வதா, அல்லது அரசியலை விலக்கி வைத்து தேச நலனை முன்னெடுப்பதா? என்பதை அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டிய நேரம் இது.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதும், அப்படிக் கூடி வாழ்தால் அரசியல் செய்ய முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

அரசியலுக்கு வெளியே ஒரு பாதை உள்ளது என்பதை சிந்திப்பது கூட இலங்கை அரசியல்வாதிகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். 

இலங்கை மட்டுமல்ல, உலகளவில் தொடரும் இந்த நெருக்கடியை அரசுகள் எப்படிக் கையாண்டன என்பதை எதிர்கால சந்ததியினர் அறிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் செயல்படவும், இப்போது எடுக்கப்படும் சரியான முடிவுகள் முன்னுதாரணமாக இருக்கும்.

ஆனால் எடுக்கப்படும் முடிவு சரியான முன்னுதாரணமா என்பதுதான் கேள்வி.

(சிவா பரமேஸ்வரன்-முன்னாள் மூத்த செய்தியாளர் பி.பி.சி)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04