பேலியகொடயிலுள்ள மத்திய மீன் சந்தை வளாகம் இன்றைய தினம் முதல் மொத்த வர்த்தகர்களுக்கான வணிகத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பேலியகொட மீன் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் மீன் சந்தையில் சில்லறை நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

மொத்த வர்த்தகத்தின் போது சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் கடைப்பிடிக்குமாறும் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் பேலியாகொட மீன் சந்தைக்கு பயணித்துள்ளார் என்பது கண்டறியப்பட்ட நிலையிலேயே கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனையின் கீழ் 22 ஆம் திகதி முதல் பேலியகொட மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது.

அதன் பின்னர் மேல் மாகாண பேலியகொட மீன் சந்தையில் விற்பனையாளர்கள் மற்றும் சந்தையில் உள்ள ஊழியர்கள் உள்ளிட்ட 529 பேரிடம் பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் இந்த சோதனையில் யாரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க நேற்றைய தினம் தெரிவித்தார்.

இந் நிலையிலேயே பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தை இன்றைய தினம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.