(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாள் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உட்பட மூவரை குற்றப்புலனாய்வு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மானிப்பாயில் உள்ள வங்கியொன்றில் நகைகளைஅடகு வைத்து பெற்றுக்கொள்ளப்பட்ட பணத்தில் போலி நாணயத்தாள்கள் கலந்திருப்பதாக பெண்ணொருவரால் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பான விசாரணையை கொழும்பு குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு மாற்றியிருந்தனர்.

இந்நிலையில் அது தொடர்பான விசாரணையை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பொலிஸார் குறித்த போலி நாணயத்தாள் தொடர்பாக முறைப்பாடு செய்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

இதன்படி அப் பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி அப் பெண்ணே என்பது தெரியவந்துள்ளது.

மேலும் குற்றப்புலனாய்வு பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்திருப்பதாவது,

குறித்த முறைப்பாட்டை செய்த பெண்ணுக்கு அவர்களுடைய உறவினர்கள் தமது திருமணத்திற்கு வைத்திருந்த பணத்தை கொடுத்துள்ளனர். 

இதன் பின்னர் அப் பணத்தை சில நாட்களின் பின்னர் மீள கேட்டபோது அவரிடம் கொடுப்பதற்கு பணமிருக்கவில்லை.

இதனையடுத்தே குறித்த பெண் தான் ஒர் ஆசிரியர் எனக்கூறி பாடசாலை தேவைகளுக்கு என யாழில் உள்ள புகைப்பட பிரதியாக்கல் நிறுவனமொன்றில் 5ஆயிரம் ரூபா பெறுமதியான 40 தாள்களை அச்சிட்டுள்ளார். 

இதன் பின்னர் தன்னிடமிருந்த நகைகளை வங்கியொன்றில் அடகு வைத்து அதன் மூலம் 4 இலட்சத்தி 90ஆயிரம் ரூபா பணத்தினை பெற்றுள்ளார். 

இதன் பின்னர் அவர் வங்கியில் இருந்து பெற்ற 4 இலட்சத்தில் 2இலட்சம் ரூபாவுக்கு  தான் போலியாக தயாரித்த இரண்டு இலட்சத்தை கலந்துகொடுத்துள்ளார். 

இதன் பின்னர் உறவினர்கள் திருமண மண்டபத்தில் அப் பணத்தை செலுத்த சென்ற போது அதில் போலி பணம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பெண் தான் எதுவும் அறியாதது போல் இளவாளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். 

இந்நிலையில் குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த போலி நாணயத்தாள்களை வடிவமைத்த குறித்த நிறுவன கிராப்பிக்ஸ் வடிவமைப்பாளர் அந் நிறுவன உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அச்சிடப் பயன்படுத்தப்பட்ட புகைப்பட பிரதியாக்கல் இயந்திரமும் சீல் வைக்கப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.