அம்பாறை மாவட்டத்தின் தமன மற்றும் உகன ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் வெலிசற கடற்படை முகாமில் பொலனறுவையில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட கடற்படை சிப்பாய் பழகியிருந்த அனைவரும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அங்கு 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து குறித்த  29 பேரும் தனிமைப்படுத்தப்பட்டதுடன், வெலிசறை கடற்படை முகாமின் ஒரு பகுதியும் முடக்கப்பட்டது.

இதேவேளை, ஜா எல பகுதியில் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை பிடித்து அவர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் குறித்த கடற்படை வீரர்கள் பங்கேற்றிருந்ததாக அறிய முடிகின்றது.

இந்நிலையில், தற்போது குறித்த கடற்படை முகாமில் இருந்து விடுமுறையில் சென்ற கடற்படை வீரர்கள் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையிலேயே இதன் ஒரு கட்டமாக அம்பாறை மாவட்டத்தின் தமன மற்றும் உகன ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, அங்கு சில தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.