சிங்கப்பூர் மக்களைப் போன்றே, வெளிநாட்டு தொழிலாளர் சமூகத்தையும் கொரோனா கொடுமையிலிருந்து பாதுகாப்போம் என சிங்கப்பூர் பிரதமர் லீ , ஊரடங்கு நிலைவரங்கள் குறித்து தனது நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டதுடன் இன்னும் ஒரு வருடத்துக்கு இன்றைய இடர்மிகு நிலையை மக்கள் சகித்துக் கொள்ளவேண்டியிருக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
கொவிட் – 19 வைரஸ் தொற்று நோயிலிருந்து சிங்கப்பூர் மக்களை பாதுகாப்பது போன்றே வெளிநாடுகளிலிருந்து வந்து வேலை செய்கின்ற தொழிலாளர்களையும் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் முழு உலகையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸின் கொடூரத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற அதிரடி நடவடிக்கைகள் குறுகிய காலத்துக்கு வேதனையைத் தந்தாலும், எதிர்கால நலன்களை மனதிற்கொண்டு தியாக உணர்வுடன் ஒத்துழைக்குமாறு தனது நாட்டு மக்களிடமும் வெளிநாட்டு சமூகத்திடமும் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரில் கொவிட்-19 பரவல் நெருக்கடியின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கமளிப்பதற்காக நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றினார்.
வைரஸ் பரவலை தடுப்பதற்கு சிகிச்சை முறைகளும் தடுப்பு மருந்துகளும் கண்டுப்பிடிக்கப்படும் வரை உத்தேசமாக ஒரு வருட காலத்துக்கு இன்றைய இடர்மிகு நிலை தொடரக்கூடும் என்றும் அவர் கூறினார். தனது அரசாங்கம் சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்துகின்ற ஊரடங்கு தொடர்பான ஒழுங்குவிதிகள் குறித்த விளக்கங்களை தனது உரையில் அவர் விரிவாக விளக்கமளித்தார். அதிலுள்ள தகவல்களை இலங்கை மக்களும் அறிந்துகொள்வது பெருமளவுக்கும் பிரயோசனமாக இருக்குமென்பதால் அந்த உரையை முழுமையாக தமிழில் தருகிறோம்.
அன்புள்ள சிங்கப்பூரியர்களே, சிங்கப்பூர் வாசிகளே,
நான் உங்கள் முன் உரையாற்ற மீண்டும் வந்திருக்கின்றேன். கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் பரவல் குறித்த பிந்திய நிலைவரங்களை உங்களுக்கு அறியத்தர விரும்புகின்றேன். ஊரடங்கை நடைமுறைப்படுத்தத் தொடங்கி இப்போது இரண்டுவாரங்கள் நிறைவடைந்திருக்கின்றன. நாம் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வீடுகளுக்குள் இருந்து ஒத்துழைத்துச் செயற்பட்டு எமக்குரிய பங்கை சிறப்பாக செய்திருக்கி்றோம்.
வீட்டில் இருந்து பணியாற்றுகின்ற நடைமுறைக்கும் வீடுகளில் இருந்து கற்பதற்கும் எம்மை நாம் இசைவாக்கிக் கொண்டுள்ளோம்.வெளியில் செல்லும்போது நாம் முகக்கவசங்களை அணிந்துகொள்வதுடன் மற்றையவர்களிடமிருந்து பாதுகாப்பான இடைவெளியையும் பேணிவருகின்றோம்.எமது குடும்பத்தவர்களுடனேயே மாத்திரமே நாம் இருந்துகொள்கின்றோம் ; தூரத்து உறவினர்களுடன் ஒன்றுகூடுவதை தவிர்த்துவருகின்றோம்.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் வைரஸ் தொற்ற அதிகம்
உள்ளூர் சமூகத்தில் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருக்கிறது. தினமும் தொற்றுக்கு இலக்காகுபவர்களின் எண்ணிக்கை 13 என்று அறிவிக்கப்படுகிறது.இது நாம் நடைமுறைப்படுத்துகின்ற ஊரடங்கினதும் நாம் எல்லோரும் சேர்ந்து வழங்கும் ஒத்துழைப்பினதும் விளைவாகும். நான் பத்து நாட்களுக்கு முன்னர் உங்கள் முன் இறுதியாக உரையாற்றிய பிறகு வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை கடுமையாக உயர்ந்திருக்கிறது.இன்று மாத்திரம் புதிதாக 1,100 பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள்.
இவையெல்லாம் பெரும்பாலும் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான மருத்துவப்பரிசோதனையை அடுத்தே கண்டுபிடிக்கப்பட்டன. விடுதிகளில் பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு வைரஸ் தொற்றியிருப்பது பாரதூரமான ஒரு பிரச்சினையாகும்.
வைரஸ் பரவலின் விரிவெல்லையை மதிப்பிடுவதற்காக, நாம் காய்ச்சல் மற்றும் சளியினால் பாதிக்கப்பட்டவர்களையும் நோய்க்குணங்குறிகள் காணப்பட்டவர்களையும் மாத்திரமல்ல, உடல்நிலை நலமாக இருப்பவர்களையும் எந்தவிதமான நோய்க்குணங்குறியும் இல்லாதவர்களையும் கூட இந்த கடும் சோதனைகளுக்கு உட்படுத்தினோம்.
தொற்றுக்கு இலக்கான வெளிநாட்டு தொழிலாளர்களில் பெரும்பாலும் எல்லோரிடமும் மென்மையான குணங்குறியே இருந்தது.அவர்களில் சிலரிடம் எந்தக் குணங்குறியும் இருக்கவுமில்லை.இது எமக்கு ஆச்சரியத்தை தரவில்லை.ஏனென்றால், அவர்கள் வயதில் இளையவர்கள்.கொவிட் --19 வைரஸின் விளைவாக கடுமையான சுகவீனத்துக்குள்ளாகக்கூடிய வாய்ப்பு குறைவாக இருப்பவர்கள். எமது டாக்டர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் கடுமையாக அர்ப்பணிப்புடன் பணிபுரிகின்றார்கள்; கொவிட் நோயாளிகளை மிகவும் கவனமாக பராமரிக்கிறார்கள்.
புதிதாக தொற்றுக்குள்ளான வெளிநாட்டு தொழிலாளர்களில் எவருக்குமே ஒட்சிஜன் உதவியோ அல்லது தீவிர பராமரிப்பு பிரிவில் சிகிச்சையோ தேவைப்படவில்லை.
பங்களாதேஷ் தொழிலாளி ஒருவர் ஏற்கெனவே இரு மாதங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.அவர் குணமடையமாட்டார் என்று நாம் ஒருபோதுமே நம்பிக்கை இழக்கவில்லை.கடந்தவாரம் அவரின் உடல்நிலை உறுதித்தன்மைக்கு வந்தது.அவர் கடந்த வாரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது வார்ட்டுக்கு மாற்றப்பட்டார். அவர் முழுமையாக குணமடைய இன்னும் சில நாட்கள் செல்லும். அவரால் புதிதாக பிறந்த தனது ஆண்குழந்தையை விரைவில் பார்க்கக்கூடியதாக இருக்கும் என நம்புகிறோம்.
வெளிநாட்டு தொழிலாளர்களின் தங்குவிடுதிகளில் நிலைவரம் இவ்வாறானதாகவே தொடர்ந்திருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
தொற்றுக்கிலக்கானவர்களில் பெரும்பாலானவர்களிடம் மென்மையான அறிகுறிகளே காணப்பட்டன. அவர்களில் மிகச்சிலருக்கே ஒட்சிசன் உதவியோ தீவிர சிகிச்சையோ தேவைப்படுகிறது. சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களி்ன் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு சகல தங்குவிடுதிகளிலும் அர்ப்பணிப்புச் சிந்தையுடைய டாக்டர்களையும் தாதியர்களையும் கொண்ட குழுக்கள் கடமையில் ஈடுபட்டு இருக்கின்றன.விடுதிகளில் மருத்துவ வளங்களை மேலும் அதிகரிப்போம். மேலும் காய்ச்சல் அல்லது சளி நோய்க்குணங்குறி இருப்பவர்களுக்கும் நேரகாலத்தோடு உகந்த சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்துகொள்வதற்கு நாம் கூடுதல் மருத்துவப் பணியாளர்களை கடமையில் ஈடுபடுத்தவிருக்கிறோம்.
மென்மையான குணங்குறி தென்படுபவர்களை விடுதிகளுக்குள்ளேயே தனியான இடத்தில் வைத்து அல்லது வேறு இடங்களில் உள்ள சமூக பராமரிப்பு நிலையங்களில் வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடுசெய்வோம். தீவிரமான சிகிச்சை தேவைப்படுபவர்கள் மீது உடனடிக் கவனம் செலுத்தப்பட்டு அவர்கள் விரைவில் குணமாகக்கூடிய வகையில் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படுவதை நாம் உறுதிசெய்வோம்.
வயது மூத்த தொழிலாளர்கள் மீது விசேட கவனம்
எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களான வயது மூத்த தொழிலாளர்கள் மீது நாம் கூடுதல் விசேட கவனம் செலுத்துவோம்.அவர்களை தீவிரமாக, நெருக்கமாக கண்காணித்து சிகிச்சை அளிக்கக்கூடியதாக வேறு தங்குவிடுதிகளுக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஒரு விடயத்தை சுருக்கமாக மீண்டும் கூறவிரும்புகிறேன்.அதாவது எமது சிங்கப்பூர் மக்களைக் கவனிப்பது போன்றே உங்களையும் நாங்கள் கவனிப்போம்.இடர்மிகுந்த இந்த காலகட்டத்தில் நீங்கள் தருகின்ற ஒத்துழைப்புக்கு நாம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.நாம் உங்களது ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் ஜீவாதாரத்தை கவனித்துக்கொள்வோம்.உங்களுக்கு சம்பளங்களை கொடுக்குமாறும் நீங்கள் உங்கள் நாடுகளுக்கு பணத்தை அனுப்புவதை உறுதிசெய்துகொள்ளுமாறும் உங்கள் முதலாளிமார்களை கேட்டுக்கொள்வோம். உங்களது குடும்பத்தவர்களுடனும் நண்பர்களுடனும் நீங்கள் தொடர்பில் இருப்பதையும் நாம் உறுதிசெயவோம்.
ரமழான் பண்டிகையை கொண்டாடுவோம்
ரமழான் இன்னும் சில நாட்களில் தொடங்கவிருக்கிறது.அதை முஸ்லிம் தொழிலாளர்கள் அனுஷ்டிப்பதற்கு வசதியாக ஏற்பாடுகள் செய்யப்படுவதை நாம் உறுதிசெய்வோம்.அதேவேளை, ரமழான் பண்டிகை அடுத்தமாதம் வரும்போது நாம் (கடந்த வாரம் எமது இந்திய நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடியது போன்று ) முஸ்லிம் நண்பர்களுடன் அதைக் கொண்டாடுவோம். இது உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் நாம் செய்யவேண்டிய கடமையும் பொறுப்புமாகும்.
விடுதிகளில் தங்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு அப்பால், வேறு இரு வகையான வெளிநாட்டு தொழிலாளர்களை மிகவும் நெருக்கமாக கவனித்துவருகின்றாம். வியாபார நிலையங்களில் பணியாற்றிக்கொண்டு தனியார் வீடுகளிலும், வீடமைப்பு வசதி வாரியத்துக்கு சொந்தமான தொடர்மாடி வீட்டுத்தொகுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களும் அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களுமே அவர்கள் ஆவர். சிங்கப்பூர் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதற்காக ஊரடங்கின்போதும் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் வீடமைப்பு தொகுதிகளையும் முக்கியமான கவனிப்புக்குரிய இடங்களையும் கட்டமைப்புக்களையும் துப்புரவாக்குகிறார்கள். வேறு சிலர் எமது ‘புரோட்பாண்ட் நெற்வேர்க்’ போன்ற முக்கியமான உட்கட்டமைப்பு வசதிகளைப் பேணுகிறார்கள். வெளிநாட்டு தொழிலாளர்களின் தங்குவிடுதிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் நடமாடுகின்ற இவர்கள் வைரஸ் காவிகளாக இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த தொழிலாளர்களை தனியாக வேறு இடங்களில் தங்கவைக்கவிருக்கிறோம். இந்த தொழிலாளர்கள் விடுதிகளுக்கு வந்து சென்றால் அவர்கள் வைரஸை பரப்பக்கூடும். அதனாலேயே இந்த தனியாக வைக்கும் ஏற்பாடு.
அவர்களை பரிசோதித்து வருகிறோம். அவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய வைரஸ் தொற்றை முன்கூட்டியே கண்டறிவதற்கு இதுவரை தங்கு விடுதிகளில் கிருமித் தொற்று குழுமங்கள் பெரியளவில் கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளனர். அவை சமூகத்துக்குள் பரவவில்லை. நாங்கள் எங்களாலான அனைத்தையும் செய்வோம். நிலைமையை இவ்வாறே வைத்திருக்க சமூகத்தில் இந்த அதிரடித் திட்டம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. சமூகத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அண்மையில் குறைந்துள்ளது. இதற்குக் காரணம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு தியாகங்களை செய்ததே ஆகும்.அதிரடித் திட்டங்களுக்கு இணங்கி நடந்துகொண்டோம். நாம் மெத்தனமாக இருத்தலாகாது. நாம் தொடர்ந்து பாடுபடவேண்டும்.
அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வு
அன்றாட கிருமித் தொற்று எண்ணிக்கையை கணிசமாக குறைப்பதற்கு ஒற்றை இலக்கத்துக்கு அல்லது பூச்சியத்துக்கும்கூட தொற்று இல்லாதவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். அவர்களுக்கு வைரஸ் எப்படித் தொற்றியதென்று எமக்குத் தெரியவில்லை. ஏனெனில், அதன் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. சமூகத்தில் வைரஸ் தொற்று சம்பவங்கள் அதிகளவில் இருப்பதையே இது காட்டுகிறது. அவற்றை நாம் இன்னும் கண்டறியவில்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சுக்களுக்கிடையிலான செயலணிகளுடன் நான் கலந்து பேசினேன். சமூகத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவதை உறுதி செய்வதை நாம் விரும்புகிறோம்.
வார நாட்களில் பொருட்களை வாங்க தனியாக வெளியே செல்லுங்கள்
தங்கு விடுதிகளிலிருந்து சமுகத்துக்கு வைரஸ் தொற்று பரவினால் அதை முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டும். தொற்றுக்கு இலக்காகும் புதிய குழுக்கள் உருவாகுவதை நாம் தடுக்க வேண்டும். இந்த இரண்டு இலக்குகளையும் எட்டுவதற்கு நாம் அனைவரும் பாதுகாப்பாக இருந்து நமது அதிரடித் திட்டத்தை பின்பற்ற வேண்டும். அனைத்து சிங்கப்பூரியர்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே - உணவு அல்லது மலிகை பொருட்களை வாங்குவதே- மாத்திரமே வெளியே செல்லுங்கள். இல்லையெனில், தயவு செய்து வீடுகளுக்குள்ளேயே இருந்து கொள்ளுங்கள். நீங்கள் வெளியில் செல்ல வேண்டுமானால் தனியாகச் செல்லுங்கள். குழுவாக அல்லது குடும்பமாகச் செல்லாதீர்கள். வெளியில் உடற்பயிற்சி செய்யும்போது தனியாக அதுவும், உங்கள் அக்கம் பக்கத்திலுள்ள இடங்களில் மாத்திரம் செய்யுங்கள்.
இது வெறுமனே சட்டத்தை பின்பற்றுவது மாத்திரமல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். விதிமுறைகளின் நோக்கம் மக்கள் நடமாட்டத்தை குறைந்தபட்ச அளவுக்கு குறைப்பதும் சமூகத்தில் சுற்றித் திரிவதை தவிர்ப்பதுமேயாகும்.இதுதான் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மற்றும் அனைவரையும் பாதுகாப்பதற்கான ஒரே வழி. அதனால், அனைவருமே ஒத்துழைத்து செயற்பட்டு உங்கள் பங்கை ஆற்றுவீர்கள் என நான் நம்புகிறேன். புது இறைச்சி, மீன் வகைகள் மற்றும் மரக்கறி வகைகள் விற்பனை செய்கின்ற சந்தைகள் (WET MARKET) போன்றவை வைரஸ் தொற்று அதிகமாக பரவக்கூடிய பிரபலமான இடங்களாக விளங்குவது இன்னும் சிக்கலாகவே உள்ளது. மக்கள் தொடர்ந்து இந்த இடங்களிலேயே கூடுகின்றனர். பாதுகாப்பான தூர இடைவெளியை பேணுவது சிரமமாகவுள்ளது. இந்த இடங்களுக்கு நுழைவதற்கான கட்டுப்பாடுகளை விதிக்கும்போதுதான் மக்கள் கூட்டத்தை குறைக்க முடிகின்றது. நீங்களும் உங்கள் பங்கை ஆற்றலாம்.
மலிகைப் பொருட்களை வாங்க சந்தைகளுக்கு வார இறுதி நாட்களுக்குப் பதிலாக வார நாட்களில் செல்லுங்கள். உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துச் செல்லாதீர்கள். நீங்கள் வெளியே செல்லும்போது தனியாகச் செல்லுங்கள். தேவையானவற்றை வாங்கிவிட்டு நேரடியாக வீடுகளுக்குத் திரும்புங்கள். அதிகமான வேலைத்தளங்களை மூடவிருக்கிறோம். ஆகவே, அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே தொடரும். அத்தியாவசிய சேவைகளுக்கான ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் ஊழியர்களிடையே வைரஸ் தொற்று பரவும் அபாயத்தை குறைக்கவும் இது உதவும். சில சேவைகளின் தரம் பாதிக்கப்படலாம். உதாரணத்துக்கு வீட்டு வசதி பாரிய கட்டடத்தொகுதிகளில் புல் வெட்டும் பணிகள் குறைக்கப்படும். இதனை ஏன் செய்கிறோம் என அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.
ஜூன் முதலாம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு
நாம் மே 4 ஆம் திகதி வரையில் இந்த நடவடிக்கைகளை செயற்படுத்துவோம். அதன் பின்னர் நம்மால் இந்த கட்டுப்பாடுகளை முழுமையாக நிறுத்திவிட்டு வழமை நிலைக்கு திரும்ப முடியாது. ஆகவே, நாம் இதனை மேலும் நான்கு வாரங்களுக்கு – ஜூன் 1 வரை - நீட்டிப்போம். சமூகத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று குறைந்தால் மாற்றங்களைச் செய்யலாம். சில நடவடிக்கைகளை தளர்த்துவது குறித்து பரிசீலக்கலாம். இந்த வகையில் நாம் முன்னேற்றத்தை கண்டுள்ளோம் என நாம் திட்டவட்டமாக உறுதிகொள்ளலாம்.
இந்த நீடிப்புக் குறைத்து பலர் ஏமாற்றமடையக் கூடும். குறிப்பாக எமது வர்த்தகங்களும் ஊழியர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலைமையை காண்கிறோம். வைரஸ் தொற்றைத் துடைத்தெறிவதற்கு இந்த குறுகிய கால வேதனை தவிர்க்க முடியாதது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்பதை நம்புகிறேன். அன்புக்குரியவர்களின் சுகாதாரத்தை பாதுகாக்க, பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் தொடர்ந்து உதவும். வர்த்தகங்களும் அதில் பணியாற்றும் ஊழியர்களும் நீடிக்கப்பட்ட அதிரடித் திட்டத்தின்போது நிலைமையைச் சமாளிப்பதற்கு இப்போதுபோன்று அரசாங்கம் அதே ஆதரவை வழங்கும். அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்புக்களை நடத்தி அதன் விவரங்களை வெளியிடுவார்கள்.
செய்ய வேண்டிய 3 காரியங்கள்
இந்த நிலைமை நம்மை எங்கே கொண்டு செல்கிறது என்பதை நீங்கள் இயல்பாகவே கேட்கலாம். எவ்வாறு நாம் இந்த அதிரடித் திட்டத்திலிருந்து விடுபடுவது யாருக்குமே தெரியாது. இந்த வைரஸ் தொற்று நோய் பரவல், சிகிச்சைகளும் சிகிச்சை முறைகளும் தடுப்பு மருந்துகளும் கிடைக்கப் பெறுவதற்கு முன்னர் உத்தேசமாக ஓராண்டுக்கு மேல் நீடிக்கலாம். ஆகவே, நாம் படிப்படியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதிரடித் திட்டத்திலிருந்து விடுபட நாம் மூன்று காரியங்களைச் செய்ய வேண்டும். முதலாவதாக நாம் படிப்படியாகச் செயற்பட வேண்டும். பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதையே நியூஸிலாந்தும் ஜேர்மனியும் ஒவ்வொரு நிலையிலும் மிகவும் கவனமாக செய்யத் தொடங்கியுள்ளன. நோய் பரவலை முறியடித்து விட்டதாக அந்த நாடுகள் நம்புகின்றன. என்றாலும் அவை கூடுதல் கவனமாக இருக்க விரும்புகின்றன. கொவிட் – 19 மீண்டும் தலைதூக்கினால் இரண்டாவது முடக்க நிலைக்கு தள்ள வேண்டியிருக்கும் என்பதை மனதிற்கொண்டு அந்த நாடுகள் நிதானமாக செயற்படுகின்றன. கொவிட் -19 பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் புதிய வைரஸ் தொற்றை கண்டறிய முடியும். அதனை நாம் படிப்படியாக தொடங்கியுள்ளோம்.
மற்ற நாடுகளிலிருந்து சோதனைக் கருவிகளையும் சாதனங்களையும் கொள்வனவு செய்வதை மாத்திரமன்றி நமது சொந்த பரிசோதனைக் கருவிகளையும் பயன்படுத்தி உற்பத்தி செய்து வருகின்றோம். தகவல் தொழில் நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தவேண்டும். அப்போதுதான் கொவிட் - 19 வைரஸ் தொற்றுச் சம்பவங்களை கண்டறிந்து, அவை எப்படி பரவின என்பதை சிறப்பாக அறிந்துகொள்ள முடியும். நம்மிடம் TRACE TOGETHER செயலி (அப்ஸ்) இருக்கிறது. தற்போது மற்றைய செயலிகளையும் உருவாக்கி வருகிறோம். இவை பயனளிக்க வேண்டுமானால் நமக்கு அனைவரினதும் ஒத்துழைப்புத் தேவை. இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். தென் கொரியர்கள் செய்ததைப் போன்று இரகசிய தகவல்களைப் பற்றிய கவலைகள் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், இவற்றை நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
அதிரடித் திட்டத்திலிருந்து முன்கூட்டியே விடுபட்டு, திறந்த வெளியில் பாதுகாப்பாக இருப்பதையும் தற்போதைய நிலைமையையும் ஒப்பிட்டுப்பார்க்க என்னால் முடியும். இது அனைவருக்கும் சுலபமான காலகட்டம் அல்ல. நாம் முன்னேற்றமடைகிறோம் இன்னும் வெற்றி பெறவில்லை. அதிரடித் திட்டம் பயனளிப்பதாகவே முடிவுகள் காட்டுகின்றன. நாம் அனைவரும் இன்னும் சிறிது முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்தத் திட்டங்களை சிறந்த வகையில் பயன்படுத்துங்கள். மீண்டும் உங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாடுகின்றேன். நம்பிக்கையுடன் வாழுங்கள். வைரஸை ஒழித்துக்கட்ட- நோய்ப் பரவல் சங்கிலியை முறியடிக்க நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம். தற்போதைய இடர்மிகு சூழ்நிலையை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM