இந்தியாவில் சென்னை ராயப்பேட்டையில், பூட்டிய வீட்டிலிருந்து அழுகிய நிலையில் 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கள்ளக்காதல் விவகாரத்தினாலே  4 பேரும் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன. 

காரைக்குடியைச் சேர்ந்தவர் சின்ராஜ். அங்குள்ள ஒரு இனிப்புக் கடையில் இனிப்பு செய்பவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

காரைக்குடி அருகேயுள்ள திருப்பத்தூர் கட்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது38). இவரது மகள்கள் பரிமளா (18), பவித்ரா (18), சினேகா (16) இதில் பரிமளாவும், பவித்ராவும் இரட்டையர்கள்.

பாண்டியம்மாளுக்கும் அவரது கணவருக்கும் குடும்ப தகராறு காரணமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் அவர் மனைவி மற்றும் மகள்களை பிரிந்து சென்று விட்டார். இதனால் பாண்டியம்மாள் தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் சின்ராஜ் வேலை பார்க்கும் இனிப்புக் கடைக்கு பாண்டியம்மாள் அடிக்கடி சென்று வந்தார். அப்போது சின்ராஜுக்கும், பாண்டியம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

சின்ராஜுக்கு திருமணம் ஆகவில்லை. எனவே அவர் பாண்டியம்மாளுடன் குடும்பம் நடத்த விரும்பினார்.

நாம் கணவன்-மனைவி போல வாழலாம் என்று சின்ராஜ், பாண்டியம்மாளுக்கு ஆசை காட்டினார். அதற்கு பாண்டியம்மாள் எனக்கு 3 மகள்கள் இருக்கிறார்கள்.

எனவே ஒன்றாக குடித்தனம் நடத்த முடியாது என்று கூறி மறுத்தார். அதற்கு சின்ராஜ் உனது மகள்களை எனது மகள்களைப் போல பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதற்கு பாண்டியம்மாள் காரைக்குடியில் நாம் ஒன்றாக வசித்தால் உறவினர்களும், தெரிந்தவர்களும் கேலி பேசுவார்கள் என்றார்.

இதையடுத்து சின்ராஜ், பாண்டியம்மாளிடம் உன்னையும், 3 மகள்களையும் சென்னைக்கு அழைத்து செல்கிறேன். அங்கு நாம் ஒன்றாக குடும்பம் நடத்தலாம் என்றார். இதற்கு பாண்டியம்மாள் சம்மதித்தார்.

இதையடுத்து பாண்டியம்மாளையும், அவரது 3 மகள்களையும் சின்ராஜ் கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னைக்கு அழைத்து வந்தார்.

ராயப்பேட்டை முத்து தெருவில் உள்ள குடியிருப்பில் முதல் மாடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார்கள். அக்கம் பக்கத்தினரிடம் சின்ராஜ், பாண்டியம்மாள் இருவரும் தாங்கள் கணவன்- மனைவி என்றும், பரிமளா, பவித்ரா, சினேகா 3 பேரும் எங்கள் மகள்கள் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

பாண்டியம்மாளை சின்ராஜ் மனைவியாகவும்,அவரது மகள்கள் பரிமளா, பவித்ரா, சினேகா ஆகியோரை தனது மகள்களாகவும் ஏற்றுக் கொண்டார்.

குடும்ப செலவு மற்றும் பாண்டியம்மாள் மகள்களின் படிப்புச் செலவையும் சின்ராஜே ஏற்றுக் கொண்டார்.

பட்டினப்பாக்கத்தில் உள்ள ஒரு இனிப்புக் கடையில் சின்ராஜ் சுவீட் இனிப்பு செய்வதற்கு வேலைக்கு சேர்ந்தார். அதில் வரும் வருமானத்தில் கடந்த 4 வருடமாக அவர்கள் சந்தோ‌ஷமாக குடும்பம் நடத்தினர்.

இந்த நிலையில் தான் தான் இதுவரை மகள்களாக நினைத்தவர்களில் மீது சின்ராஜுக்கு காம ஆசை ஏற்பட்டது. மூத்த மகள்களில் ஒருவரை சின்ராஜ் அடைய விரும்பினார்.

அந்த மகளின் பெயரை பாண்டியம்மாளிடம் குறிப்பிட்டு அவளை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு நீ சம்மதித்து எனக்கு திருமணம் செய்துவை என்றார். இதைக் கேட்டதும் பாண்டியம்மாள் இதுவரை என்னுடன் கணவர் போல குடும்பம் நடத்தி விட்டு என் மகளை திருமணம் செய்ய நினைக்கிறாயா என்று ஆவேசமானார்.

அதன் பிறகு சின்ராஜை பாண்டியம்மாள் வீட்டுக்குள் படுக்க அனுமதிக்கவில்லை. வேலை முடிந்து இரவில் வீட்டுக்கு வந்ததும் சின்ராஜை வெளியில் படுத்துக் கொள்ளுமாறு கூறினார். இல்லாவிட்டால் வேறு எங்காவது வெளியில் சென்று தங்கிக் கொள்ளுமாறு கூறினார். இதனால் அவர்களுக்கிடையே தொடர்ந்து தகராறு ஏற்படத் தொடங்கியது.

கடந்த வாரம் சின்ராஜ் - பாண்டியம்மாள் உள்பட அனைவரும் சொந்த ஊரான காரைக்குடி சென்றனர். கடந்த 20 ஆம் திகதி மீண்டும் அவர்கள் சென்னை திரும்பினார்கள். அன்று இரவு மகளை திருமணம் செய்து வைக்குமாறு பாண்டியம்மாளிடம் சின்ராஜ் கேட்டார். அதற்கு அவர் மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சின்ராஜ் ஆவேசமானார். எனக்கு திருமணம் செய்து வைக்கா விட்டால் உங்கள் யாரையும் உயிருடன் விடமாட்டேன் என்று மிரட்டினார்.

அதற்கு பாண்டியம்மாள் செவிசாய்க்கவில்லை. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்றார். இதனால் சின்ராஜுக்கு கொலை வெறி ஏற்பட்டது. வீட்டை உள்பக்கமாக பூட்டிய சின்ராஜ் இரும்பு கம்பியால் பாண்டியம்மாளை ஓங்கி தாக்கினார். கீழே விழுந்து துடிதுடித்து இறந்தார்.

அதன் பிறகு அவரது கொலை வெறி பாண்டியம்மாளின் மகள்களின் மீது திரும்பியது. பரிமளா, பவித்ரா, சினேகா ஆகிய 3 பேரையும் ஒருவர் பின் ஒருவராக துடிக்க துடிக்க கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்னர் 4 பேரும் இறந்ததை உறுதி செய்ததும் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்த கொலை தொடர்பாக சின்ராஜை பிடிக்க பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இன்று மெரினா கடற்கரையில் பதுங்கி இருந்த அவர் கைது செய்யப்பட்டார்.