(ஆர்.யசி)

"கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் அச்சுறுத்தல் நாட்டில் நிலவுகின்ற நிலையில் பொதுத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றால் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களில் 40 சதவீதமளவில் உள்ள வயோதிப வாக்களர்கள் குறித்து அதிகளவில் சிந்திக்க வேண்டும் என தெரிவிக்கும் பெபரல் அமைப்பு, அரசியல் அமைப்பு, அதிகாரம் என்பவற்றை விடவும் மக்களின் பாதுகாப்பு குறித்து அதிகம் சிந்திக்கவேண்டும் எனவும் சகல அரசியல் தரப்பையும் வலியுறுத்துகின்றது.

தற்போதுள்ள அரசியல் நெருக்கடி நிலையில் இது குறித்து பெபரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர்  ரோஹன ஹெட்டியாராச்சி கூறுகையில்,

பொதுத் தேர்தல் நடத்தப்படுமா அல்லது காலதாமதம் ஏற்படுமா என்ற கேள்விக்கு மத்தியிலும் அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தும் விதத்தில் அரசியல் கட்சிகள் செயற்பட்டு வருகின்றது என்பதே தெளிவாக அவதானிக்க முடிகின்றது. எவ்வாறு இருப்பினும் தேர்தல் நடத்துவதாக இருந்தால் முதலில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவே இப்போதுள்ள சூழலில் மிகச் சரியான நடவடிக்கையாக இருக்கும். உரிய நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காக நாட்டின் நிலைமைகளை கருத்தில் கொள்ளாதிருப்பது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அத்துடன் மக்கள் மத்தியில் இப்போது கொரோனா வைரஸ் குறித்த அச்சம் நிலவுகின்றது. அவ்வாறு இருக்கையில் தேர்தல் ஒன்றினை அறிவித்தால் மக்களின் முழுமையான பங்களிப்பு அதில் இருக்குமா என்ற கேள்வி எழுகின்றது. பொதுத் தேர்தலின் பெறுபேறுகளை பெறவேண்டும் என்றால் குறைந்த பட்சம் 75 வீதம் தொடக்கம் 80 வீத வாக்குகள் பதிவாகியிருக்க வேண்டும். இப்போதுள்ள நிலையில் 50 வீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றாலும் கூட அது சுயாதீன தேர்தல் ஒன்றின் அடையாளமாக இருக்கப்போவதில்லை.

அதுமட்டும் அல்லாது இம்முறை தேர்தலில் வாக்களிக்க 16 மில்லியன் மக்கள் தெரிவாகியுள்ளனர். அவர்களின் 40 வீதமானவர்கள் வயோதிய வாக்காளர்கள். 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயது எல்லைகளை கொண்டவர்கள் இவ்வாறான சூழ்நிலையில் வாக்களிக்கும் நிலையங்களுக்கு செல்வதனால் அவர்களின் பாதுகாப்பு எந்த விதத்திலாவது உறுதிப்படுத்தப்படுமா என்ற கேள்வி எம்மத்தியில் எழுகின்றது. அவர்களை பாதுகாக்க வேண்டும். இப்போதுள்ள நிலைமைகளின் பிரகாரம் வயதானவர்கள் அதிகளவில் கொரோனா நோய் தாக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளது அறிந்துகொள்ள முடிகின்றது. எனவே இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஆகவே தேர்தல் குறித்து சிந்திப்பதை விடுத்து ஆளும் தரப்பினரும் எதிர் தரப்பினரும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துவது ஆரோக்கியமானதாக அமையும் என கருதுகின்றோம். ஒரு மாதகாலம் தேர்தல் பிற்போடப்படுவதால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து பேசிக்கொண்டு இருக்காது அவ்வாறு நெருக்கடியில் தேர்தலை நடத்தி அதன் மூலமாக ஏதேனும் நெருக்கடிகள் மக்களுக்கு ஏற்பட்டால் அதனால் நாடே பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே அடுத்த கட்ட சுகாதார தன்மைகள் எவ்வாறானதாக அமையும் என்பது குறித்து சுகாதார அதிகாரிகளின் நிலைப்பாட்டை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.