உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியை ஒத்திவைப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட்  சபையின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டும், இரத்து செய்யப்பட்டும் உள்ளன.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. ஐ.சி.சி.யில் முழுநேர உறுப்பினராகவுள்ள அனைத்து தலைமை நிர்வாகக் குழுவினருடன் ‘வீடியோ கொன்பரென்ஸ்’மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் எதிர் காலத்தில் நடைபெவுள்ள போட்டிகள் குறித்து விவாதிக்கப்படும். இருநாடுகள் இடையேயான பல்வேறு தொடர்கள் நடத்துவது கேள்விக்குறியாகியுள்ளமை குறித்தும் ஆலோசிக்கப்படும்.

ஐ.சி.சி.யின் இந்த கூட்டத்தில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியை ஒத்திவைப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும். இதனை ஒத்திவைப்பதற்கு  அதிகமான வாய்ப்புக்கள் உள்ளன.மேலும், அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலக இருபதுக்கு 20 உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பமான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியை 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் லண்டனில் நடத்த அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பால் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.