வடமாகாணத்தில் தபால் சேவைகள் இன்று வழமைக்குத் திரும்பியுள்ளது என மாகாண பிரதித் தபால் மா அதிபர் மதுமதி வசந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் தபால் சேவைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. வட மாகாணத்தில் அனைத்து தபாலகங்களிலும் தேங்கிக் கிடக்கும் தபால் தரம் பிரிக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பி அதற்குரிய நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல் கொழும்பில் இருந்தும் தபால் பொதிகள் இன்றையதினம் வடமாகாணத்திற்கு எடுத்து வரப்படுகின்றன.

தபால் ரயில்களின் போக்குவரத்து முடங்கியுள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு சேவையினை வழங்கும் முகமாக தபால் திணைக்களத்தின் வாகனங்கள் மூலம் தபால்கள் வட மாகாணத்துக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அவை நாளைமுதல் எமது பிரதேசத்தில் தரம் பிரித்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதற்கு மேலதிகமாக தபால் திணைக்களத்தினால் சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய மருந்து பொதிகள் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்க நடவடிக்கையினையும் நாம் மேற்கொண்டிருந்தோம்.

அதேபோல் அலைபேசி இணைப்பு அட்டைகள், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலன் கருதி அவர்களுக்கான ஓய்வூதியங்கள் வழங்கும் நடவடிக்கையினையும் வடமாகாண தபால் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது- என்றார்.