(இராஜதுரை ஹஷான் )

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான எவ்வித அவசியமும் அரசாங்கத்துக்கு கிடையாது. அரசியலமைப்பினை தொடர்புப்படுத்தி எதிர்த்தரப்பினர் சட்ட சிக்கலை தோற்றுவிக்க முயற்சிக்கின்றார்கள். எச்சட்ட சிக்கல் ஏற்பட்டாலும் நீதிமன்றம் ஊடாக  தீர்வு காண தயார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும். என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு அரசியல் ரீதியான கருத்துக்களை குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி செல்லுப்படியற்றது. என்று குறிப்பிட்டு அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் மாத்திரம் கவனம் செலுத்தினால் பிறகு மாறுபட்ட பிரச்சினைகள் தோற்றம் பெறும். பலமான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மாத்திரமே நாட்டை முன்னேற்றகரமான முறையில் முன்னெடுத்து  செல்ல முடியும்.

பொதுத்தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதில் எதிர் தரப்பினர் கவனம் செலுத்துகிறார்கள். தோன்றியுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண எதிர்தரப்பினர் நீதிமன்றத்தை நாடினால் அதனையும் வெற்றி கொள்ள தயாராகவே உள்ளோம் என்றார்.