(தி.சோபிதன்)

கொழும்பைச் சேர்ந்த 99 பேர் கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பலாலி இராணுவ முகாமில் தனிமைப் படுத்தப்படுத்தலுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 99 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பலாலி இராணுவ முகாமில் இன்று  புதன்கிழமை காலை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைய இவர்கள் அனைவரும் பலாலிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கான 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் விரைவில் கொரோனா தொற்று பரிசோதனைகளும் நடைபெறவுள்ளது. இந்த பரிசோதனையை யாழ்ப்பாணத்திலே மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை பலாலி இராணுவ முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை.

இதனால் ஏற்கவனே யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்தவர்களை தனிமைப்படுத்திய போது  அவர்கள் முறையாக கவனிக்க, தங்க வைக்கப்படாததன் காரணமாக கொரோனா தொற்று பலருக்கு ஏற்பட்டதாக அரச வைத்திய சங்கத்தின் வடக்கு மாகாண கிளையினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் கொழும்பை சேர்ந்த 99 பேர் திடீரென பலாலியில் தனிமைப்படுத்தலுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.