(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துள்ள  ஜாதிக ஹெல உருமயவின் தலைவர் சம்பிக ரணவக்க, முன்னாள் அமைச்சர்கள் என்ற ரீதியில் இந்த தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்பு கூறும் கடமை தமக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. இந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் யார் என்பது பற்றி ஆராய வேண்டிய பொறுப்பு முன்னாள் அமைச்சர்கள் என்ற ரீதியில் எமக்குள்ளது. எனினும் பிரதானமாக முன்னாள் ஜனாதிபதியையே இந்த பொறுப்பு சாறும். 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே இந்த தாக்குதல்கள் ஆரம்பித்துவிட்டன. எனினும் புலிகள் மீண்டும் தலைதூக்குவதாகக் கூறி முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இறுதி வரை பாதுகாப்புதுறையினர் இத்தாக்குதல் பற்றி அறிந்து கொள்ளாமல் இருந்துள்ளனர். தொடர்ந்தும் புத்தர் சிலைகளும் கிருஸ்தவ சிலைகளும் சிதைக்கப்பட்டன. இவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காது முன்னாள் ஜனாதிபதி பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளார்.

அத்தோடு 2018 ஒக்டோபரில் இடம்பெற்ற அரசியலமைப்பு சூழ்ச்சியின் பின்னர் பாதுகாப்புத்துறை பிளவடைந்தது. புலனாய்வுத்தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தாலும் அரச தலைவர்கள் பொறுப்பற்று செயற்பட்டிருந்தாலும் பாதுகாப்புத்துறை தமது கடமைகளைச் செய்திருக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் தாக்குதல் இடம்பெற்று 7 நாட்களுக்குள் சஹ்ரானுடன் தொடர்புடையோர் கைது செய்யப்பட்டதோடுஇ நாட்டில் ஏற்படவிருந்து பாரிய மதக்கலவரம் தடுக்கப்பட்டது.

அத்தோடு எதிர்காலத்திலும் இவ்வாறு தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அதனையும் எம்மால் தடுக்க முடிந்தது. இந்த தாக்குதலின் போது கர்தினால் உள்ளிட்ட கத்தோலிக்க மக்கள் பொறுமையுடன் பொறுப்புடனும் செயற்பட்டமையால் பாரிய மதக்கலவரம் தடுக்கப்பட்டது. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.