(எம்.ஆர்.எம்.வஸீம்)

எதிர்வரும் பொதுத் தேர்லில் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் விண்ணப்பங்களை மே மாதம் 4ஆம் திகதியோ அதற்கு முன்னரோ மாவட்ட தேர்தல்கள் காரியாலயங்களுக்கு சமர்ப்பிக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி இடம்பெற இருப்பதால் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் விண்ணப்பங்களை மே மாதம் 4ஆம் திகதியோ அதற்கு முன்னரோ மாவட்ட தேர்தல்கள் காரியாலங்களில் சமர்ப்பிக்கவேண்டும்.

ஏற்கனவே தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட இறுதித் தினமான கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் குறித்த திகதிக்கு உபகரமாகவே தற்போது மே மாதம் 4ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் 4ஆம் திகதிக்கோ அதற்கு முன்னரோ தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்  விண்ணப்பங்களை தங்கள் மாவட்ட தேர்தல்கள் காரியாலயங்களில் கையளிக்கவேண்டும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் மார்ச் 2ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத்தொடர்ந்து பொதுத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. என்றாலும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக குறித்த திகதியில் தேர்தலை நடத்த முடியாது என தெரிவித்து தேர்தல் பிற்போடப்பட்டடிருந்தது. இந்நிலையில் எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.