தளபதி விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம், தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் ஒரே தருணத்தில் வெளியாகவிருக்கிறது.

தளபதி விஜய் நடித்த படங்கள் தமிழகத்தை கடந்து கேரளாவிலும், தெலுங்கு பேசும் மாநிலங்களிலும் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றன. இதற்கு சர்க்கார் மற்றும் பிகில் படங்கள் சிறந்த உதாரணம்.

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியிருக்கும்‘மாஸ்டர்’ திரைப்படம், முதன்முறையாக இந்தியா முழுவதும் ஒரே தருணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாகிறது. 

இதுகுறித்த அறிவிப்பை இந்தியா முழுவதும் பட மாளிகைகளை கொண்டிருக்கும் பிரபல நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் தென்னிந்திய நடிகர்களில் தெலுங்கு நடிகரான பிரபாஸ் நடித்த பாகுபலி மற்றும் சாஹோவைத் தொடர்ந்து நடிகர் விஜயும் இந்திய அளவில் பிரபலமாகவிருக்கிறார். 

இதன் காரணமாக ‘மாஸ்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பட மாளிகைகளில் வெளியாகக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விஜய் ரசிகர்களும், விஜய் சேதுபதி ரசிகர்களும் உற்சாகமடைந்திருக்கிறார்கள். 

இதனிடையே ‘மாஸ்டர்’ திரைப்படம், நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 22 அல்லது ஜூன் 19ஆம் திகதியன்று வெளியாகக் கூடும் என்றும், படத்தின் புதிய போஸ்டர் மே மாதம் முதல் திகதியன்று வெளியாகவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.