இந்தியாவின் சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து உடனடியாக பாதிப்பு ஏற்பட்ட குறிப்பிட்ட தொலைக்காட்சியில் பணியாற்றும் 95 ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் 95 பேரில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தொலைக்காட்சியில் தற்போது தற்காலிமாக நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து 27 ஊழியர்களின் குடும்பத்தினர் , அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரையும் தொடர்பு தடமறிதல் முறை மூலம் உடனடியாக தீவிரமாக தேடி தனிமைப்படுத்தும் முயற்சியில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 27 ஊடகவியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

எனவே சென்னையில் ஊடகத்துறையினர், பத்திரிக்கைத்துறையினர் என அனைத்து செய்தியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று ஒரு நாளில் மட்டும் செய்தியாளர்கள், புகைப்படக்கலைஞர்கள், கேமராமேன்கள், அலுவலக பணியாளர்கள், வீடியோ செய்தியாளர்கள் என 295 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகளும் வெளியாக வேண்டி உள்ளது. இந்த முடிவுகள் வெளியானால் எத்தனை செய்தியாளர்களுக்கு சென்னையில் கொரோனா இருக்கிறது என்பது தெரியவரும்.

முன்னதாக மும்பையில் 53 செய்தியாளர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது நேற்று முன்தினம் திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டது.

நாடு முழுவதும் செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதும் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு பெரும் கவலையையும் சவால்களையும் ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக செய்தியாளர் சந்திப்புக்கு பதில் அறிக்கைகளை அனுப்புமாறு பத்திரிக்கையாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 19,984 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இவர்களில்  3,870 பூரண குணமடைந்துள்ளனர். இதேவேளை 640 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.