பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் இடம்பெறும் சிறு சிறு சம்பவங்கள் கூட உலகே பேசும் செய்தியாகி விடும். இளவரசி டயானாவிலிருந்து தற்போது அரச குடும்ப பாரம்பரியங்கள் ,சொகுசு வாழ்வை விட்டு நீங்கி கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ள இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் வரை, தினந்தோறும் ஏதாவதொரு செய்தி உலகின் எந்த ஊடகத்தையாவது ஆக்கிரமித்து தான் வருகின்றது. 

அந்த வகையில் அரச குடும்பத்தின் இளவரசர் சார்ள்ஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டமை குறித்து உலக ஊடகங்கள் பேசின. அதே போன்று அவர் குணமடைந்து விட்டதையும் சற்று அமைதியான செய்தியாகவே வெளிப்படுத்தின. ஆனால் அவர் எவ்வாறு குணமடைந்தார், எந்த மருத்துவத்தை பின்பற்றினார்  என்பதை மிக சூசகமாக மறைத்து விட்டன இந்த ஊடக மாபியாக்கள். ஏனெனில் இதன் பின்னணியில் உலக மருத்துவ மாபியாக்கள் இருக்கின்றன. அவை பிரித்தானியாவின் பொருளாதாரத்தையும் ஒரு கை பார்க்குமளவிற்கு வலிமை வாய்ந்தவை. அதன் காரணமாகவே தற்போது பிரித்தானிய அரச குடும்பமும் இளவரசர் சார்ள்ஸ் பயன்படுத்திய மருத்துவ முறை குறித்து வாய் திறக்காது மௌனம் காத்து வருகின்றது. 

அப்படி என்ன இதில் மர்மம் புதைந்து கிடக்கின்றது என்று பார்த்தல் அவசியம். 

சார்ள்ஸ் குணமானது எப்படி? 

கொரோனா வைரஸால் பாதிப்புற்ற இளவரசர் சார்ள்ஸ் ஆயுள்வேத மற்றும் ஹோமியோபதி வைத்திய முறைகளாலேயே குணமடைந்துள்ளதாக பல ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. இதை இந்தியாவின் ஆயுஷ் அமைச்சரும் உறுதிப்படுத்தியிருந்தார். ஆயுள்வேதம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறைகளை உள்ளடக்கிய அமைச்சே ஆயுஷ் அமைச்சாகும். 

மத்திய அமைச்சர்  ஸ்ரீபத் யசோ நாயக் இதற்குப் பொறுப்பாக இருக்கின்றார். இளவரசர் சார்ள்ஸ் குணமடைந்தது குறித்து அவர் அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தார். பாரம்பரிய மருத்துவ முறைகள் மூலமே கொரோனா போன்ற வைரஸ்களை குணமாக்க முடியும் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. பெங்களூரை சேர்ந்த ஆயுள்வேத பயிற்சியாளர் ஒருவர் பரிந்துரைத்த மருந்துகளையே இளவரசர் பயன்படுத்தி பூரண சுகமடைந்துள்ளார்.  

இதற்கு முன்னரும் எமது அமைச்சு கொரோனாவுக்கு இம்மருந்துகளை பரிந்துரைத்துள்ளது.  சீனாவும் கூட 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான டி.எம்.சி என்ற பாரம்பரிய மருத்துவத்தையே கொரோனாவுக்கு பயன்படுத்தியது. இவை பக்கவிளைவுகளற்றவை என கூறியுள்ளார்.

அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவ முறையானது மனித உடம்புக்கு ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றே மாற்று மருத்துவமாக ஹோமியோபதி மருத்துவம் கண்டு பிடிக்கப்பட்டது. அலோபதி மருத்துவரான ஜேர்மனியின் சாமுவேல் ஹனிமன் என்பவரே இதை கண்டு பிடித்தவராவார். இம்மருத்துவ முறைக்கு தற்போது 200 வருடங்களாகின்றன. இந்தியாவில் இரண்டாவது பெரிய மருத்துவமாகவும் உலகளவில் பலரும் பயன்படுத்தும் ஒன்றாகவும் இது உள்ளது. 

இயற்கையான மூலங்களிலிருந்தே இதற்கான மருந்துகள்தயாரிக்கப்படுகின்றன. இந்த மருத்துவ முறை மிகவம் இலகுவானதும் எளிமையானதுமாகும். மேலும் செலவு குறைந்ததாகும். அதன் காரணமாகவே அதை பிரபல்யப்படுத்த சர்வதேச அலோபதி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் முன்வருவதில்லை. இளவரசர் சார்ள்ஸ் விடயத்திலும் இதுவே இடம்பெற்றுள்ளது என ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

உடனடியாக மறுக்காத அரச குடும்பம்

இதே வேளை இளவரசர் சார்ள்ஸ் எவ்வாறு குணமடைந்தார் என்பதை பக்கிம்ஹாம் அரண்மனையும் இரகசியமாகவே வைத்திருந்தது. இந்தியாவின் ஆயுஷ் அமைச்சு மற்றும் பெங்களூர் ஆயுள்வேத பயிற்சி மையத்தின் கருத்துக்களுக்குப் பிறகு இளவரசரின் செய்தி தொடர்பாளர் முதன் முறையாக அதை மறுத்துள்ளார். இளவரசர் ஆயுள்வேத முறையிலான மருத்துவத்தின் மூலம் மட்டும் குணமடையவில்லை என்று தெரிவித்த அவர் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் மருத்துவ ஆலோசனைகளையே இளவரசர் பின்பற்றியதாகத் தெரிவித்திருக்கின்றார்.

இவ்விடயத்தில் அரச குடும்பத்தையே ஆங்கில மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள் மறைமுகமாக மிரட்டியிருக்கலாம் என்று ஹோமியோபதி மருத்துவ அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் இன்று உலக அளவில் அலோபதி மருந்து உற்பத்தி மற்றும் அது தொடர்பான ஏற்றுமதி, இறக்குமதி என்பன தவிர்க்க முடியாத பல பில்லியன் டொலர் வர்த்தகமாகும். குறித்த சில மருந்துகளை உருவாக்குவதற்காகவே நோய்களும் புதிதாக உருவாக்கப்படுகின்றன என்பது ஆங்கில மருத்துவ முறையின் மீது உள்ள குற்றச்சாட்டுகளாகும். 

அரச குடும்ப மருத்துவ முறை  பாரம்பரியமானது.  என்ன தான் நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும் அரச குடும்ப நம்பிக்கை என ஒன்று உள்ளது. ஆகவே அவர்கள் இந்தியாவின் சித்த ஆயுள்வேதம் மற்றும் ஹோமியோபதியையே பின்பற்றுகின்றனர் என்கிறார்கள் அரச குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்தவர்கள். 

எனினும் இளவரசர் சார்ள்ஸ் இதுவரை தான் எந்த வகை மருந்துகளை பயன்படுத்தினார் என்பது குறித்து எதுவும் கூறவில்லை. 

அரச குடும்பம் பயன்படுத்தும் மருந்துகளை வெளிப்படுத்த விரும்பவில்லையோ தெரியவில்லை. ஆனால் இன்று உலகெங்கும் ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கி 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோரை பாதிப்புக்குள்ளாக்கியிருக்கும் கொரோனா வைரஸுக்கு சரியான மருந்து என்னவென்பதை கூறினால் அது உலக நாடுகளுக்கே நன்மையளிக்குமே? மறுபக்கம் இளவரசரின் பேச்சாளர் குறிப்பிட்டது போன்று இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் பரிந்துரை மருந்துகள் என்னவென்பதை அந்த பிரிவும் வெளிப்படுத்தவில்லை. அது ஆங்கில மருந்தான அலோபதியாகவே இருந்து விட்டு போகட்டும் அதை சொன்னால் தான் என்ன என்பதே பலரினதும் கேள்வி. 

எது எப்படியானாலும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை. அதை கட்டுப்படுத்தும் மருந்துகளே பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. சீனாவும் பாரம்பரிய மருத்துவ முறைகளையே சிபாரிசு செய்துள்ளது. சித்த வைத்தியம் மற்றும் ஹோமியோபதி மூலம் இதற்கு நிரந்தர தீர்வு இருக்கின்றது என அதில் ஈடுபட்டிருப்பவர்கள்  கூறினாலும் ஆங்கில மருந்து உற்பத்தி   ஜாம்பவான் நிறுவனங்கள் அதை மூடி மறைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் கிளம்பியுள்ளன. சர்வதேச ஊடகங்கள் கூட இவ்விடயத்தில் மௌனம் காக்கின்றமை அதிசயம் தான். இந்த சர்ச்சைக்குப்பிறகு இனி அரச குடும்பத்தில் எவருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அது இரகசியமாகவே வைக்கப்பட்டு அவர்கள் குணப்படுத்தப்படுவார்கள் என்று தான் கூற வேண்டியுள்ளது.   

சிவலிங்கம் சிவகுமாரன்