மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை  காலை காவல்துறை ஊரடங்குச் சட்டம்  தளர்த்தப்பட்டதையடுத்து  மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். எனினும் மக்கள் மத்தியில் தொடர்ந்து கொரோனா அச்ச நிலமை காணப்படுகின்றது.

ஊரடங்குச் சட்டம்  தளர்த்தப்பட்டதையடுத்து  அரச போக்குவரத்து சேவைகள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற போதிலும் தனியார் சேவைகள் முழுமையாக இடம் பெறவில்லை.

அதே நேரத்தில் நீதிமன்ற செயற்பாடுகளும் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம் பெறத் தொடங்கியுள்ளது.

அத்துடன் கடந்த ஊரடங்கு தளர்வு நேரங்களை பார்க்கிலும் இம்முறை மிகவும் குறைந்த அளவிலான மக்களே பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகர் பகுதிகளுக்கு வருகை தந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

அதிகளவான வர்த்தக நிலையங்கள் இயங்கியதுடன் சன நெரிசல் குறைவாக காணப்பட்டதுடன் மக்கள் பொது இடங்களிலும் பஸ்களிலும் தங்களுடைய சமூக இடைவெளியை பேணியமையை காணக்கூடியதாக இருந்தது.

பஸ்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயணிகளை பயணிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.   

நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்றைய தினம் மதுபானசாலைகள் திறக்கப்பட்டமையினால்  அதிகமான மதுப்பிரியர்கள்  வரிசையில் நின்று மதுபானத்தை வாங்கி சென்றமையையும்  காணக்கூடியதாக இருந்தது.