(ஆர்.யசி)

தொடர்ந்தும் ஊரடங்கு சட்டத்தை நீடித்து மக்களை முடக்கி வைத்துக்கொண்டு நாட்டின் உற்பத்திகளை கையாள முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் நாட்டினை முடக்கி வைத்திருந்தால் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி காணும் என கூறும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தொற்றுநோயை மறைந்து சமூகத்தில் நடமாடிய ஒரு  சிலராலேயே இன்று நாடே மோசமான விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சுறுத்தலின் மத்தியிலும் அரசாங்கம் ஊரடங்கை  தளர்த்துள்ளதை அடுத்து  இது குறித்த பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் சுகாதார அமைச்சரின் நிலைபாட்டை வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்து 18 இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கி வீட்டில் அவர்களை வைத்திருக்க முடியுமென்றால், மக்களுக்கான உணவுகள், மருந்துகள் அனைத்தையும் அரசாங்கமே வழங்கி மக்களை வீடுகளில் வைத்திருக்க முடியுமென்றால், வேலைகளை இழந்த அனைவருக்கும் மாதாந்த கொடுப்பனவுகளை வழங்க முடியுமென்றால் ஒரு வருடகாலமேனும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்துகொள்ள முடியும். 

ஆனால் எம்மால் அவ்வாறு செயற்பட முடியாது. நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள் அனைவரதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. உற்பத்திகள் அனைத்துமே கைவிடப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரம் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்து மக்களை முடக்கி நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்க முடியாது.

நாம் பாரிய அளவில் அபிவிருத்தி கண்ட தேசம் அல்ல. எமது நாட்டின் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். அரசாங்கம் ஒரு எல்லை வரையே அனைத்தையும் கையாள முடியும். ஒரு கட்டத்திற்கு மேல் நாட்டின் பொருளாதார செயற்பாடுகளுக்கான மாற்று வேலைத்திட்டங்களை முன்னெடுத்தாக வேண்டும். இதற்கு மேலும் நாட்டினை முடக்கி வைத்தால் பாரிய வீழ்ச்சிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும். ஆகவேதான் மாற்று நடவடிக்கைகளை கையாள நாம் தீர்மானம் எடுத்துள்ளோம். இதில் சுகாதார அதிகாரிகள் கூறும் அனைத்து செயற்பாடுகளையும் மக்கள் கடைப்பிடித்தாக வேண்டும். இல்லையேல் அனைவருக்கும் நெருக்கடி ஏற்படும்.

இந்த நிலைமை நாட்டில் உருவாக ஒரு சிலரது மோசமான செயற்பாடுகளே காரணமாகும். கொரோனா வைரஸ் தொற்றுநோய் இருப்பது தெரிந்தும் அதனை மறைத்து சமூகத்தில் நடமாடியதன் விளைவுகளையே நாம் இப்போது அனுபவித்து வருகின்றோம். இனியாவது இவ்வாறான நபர்கள் தமது நிலைமையை மாத்திரம் கருத்தில் கொள்ளாது நாட்டினையும் மக்களையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். எவருக்கேனும் நோய் தாக்கம் உள்ளதாக ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், வழமைக்கு மாறான தன்மைகள் உடலில் அறியப்பட்டால் உடனடியாக வைத்திய பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.