இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா  கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கையில் கிரிக்கெட் சுற்றுலா மேற்கொள்ள ஏற்கனவே அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது.

இவ்விரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்கவிருந்தன.

எனினும், உலகம் பூராவும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், இப்போட்டித் தொடரை ஒத்தி வைப்பதற்கு இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் தீர்மானித்துள்ளது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த மார்ச் மாதம் கிரிக்கெட் தொடருக்காக இலங்கை வந்திருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியினரும் பயிற்சி போட்டியை இடைநடுவில் கைவிட்டுவிட்டு அவர்களது சொந்த நாட்டுக்கு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.